பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. சமையல் எரிவாயு ரூ. 50 உயர்வு..!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளதால் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுச் சென்னையில் 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்பப் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் பத்து சென்ட் உயர்ந்து 63 டாலர் 53 சென்ட்களாக உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு நேற்றைவிட 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 19 காசுகளாக உள்ளது.
டீசல் விலை நேற்றைவிட 28 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 44 காசுகளாக உள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக மும்பையில் பெட்ரோல் விலை 95 ரூபாய் 46 காசுகளாகவும், ஜெய்ப்பூரில் டீசல் விலை 87 ரூபாய் 69 காசுகளாகவும் உள்ளன. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் எதிரொலியாகச் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து காய்கறிகள், பழங்கள், தானியங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதேபோல் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து சென்னையில் 785 ரூபாயாக உள்ளது. ஜனவரி இறுதியில் 710 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை பிப்ரவரி 4ஆம் நாள் 25 ரூபாயும், இன்று மேலும் ஐம்பது ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
Comments