'கர்ப்பம் என்றால், வயிறு பெரிதாகவில்லையே!'- கடலூரில் குழந்தை திருடி கைதான பெண் எஜமான் பட மீனா போல உருக்கமான வாக்குமூலம்

0 277527

எஜமான் படத்தில் நடிகை மீனா தான், கர்ப்பமாக இருப்பதாக கூறி அனைவரையும் நம்ப வைப்பார். அதே போல, கர்ப்பமடைந்துள்ளதாக கூறி குடும்பத்தினரை நம்ப வைத்த பெண் கடலூரில் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்- பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு இரு நாள்களுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தினத்தில் மாலை 4 மணியளவில் ஒரு பெண் அந்தக் குழந்தையை மணிகண்டனின் தாய் மருத்துவமனையில் உள்ள கோவிலில் வைத்து வழிபட கேட்பதாக கூறி அறிமுகமில்லாத பெண் ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர், மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வெளியேறிச் சென்று விட்டார்.இதனால், பதற்றமடைந்த பாக்கியலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். மருத்துவமனை அருகாமையிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்ததில் அந்த பெண் இங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி கடலூர் பேருந்து நிலையத்துக்கு சென்றதாக தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக பெண்ணை தேடி வந்தனர். விசாரணையில் கடலூரை அடுத்துள்ள டி. குமாரபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் மனைவி நர்மதா என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, புதுச்சேரி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நர்மதாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டு விட்டது.

போலீஸ் விசாரணையில் நர்மதா கூறியதாவது, '' நானும் சிலம்பரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இரண்டு முறை கர்ப்பமாகியும் கரு கலைந்து விட்டது. இதனால், நானும் என் கணவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தோம். ஆனால், கர்ப்பம் கலைந்த விஷயத்தை வீட்டில் சொல்லவில்லை. இதனால், குடும்பத்தாரை மகிழ்ச்சியில் இருக்க வைக்க நான் கர்ப்பமாக இருப்பதாக நடிக்க தொடங்கினேன். வீட்டிலுள்ளவர்களும் என் கணவரும் நம்பி விட்டனர். தொடர்ந்து, 5 வது மாதம் எனக்கு சீரும் செய்தனர். பின்னர், பாகூருக்கு சென்று வசித்தோம். ஆனால், 'கர்ப்பம் என்றால் வயிறு பெரிதாகவில்லையே' என்று என்னிடத்தில் பலர் சந்தேகமாக கேட்டு வந்தனர்.

இதனால், மருத்துவமனைக்கு சென்று குழந்தை நன்றாக இருக்கிறதா என்று பரிசோதனைக்கு செய்வது போலவும் கணவரிடத்தில் நடித்தும் வந்தேன். இதற்கிடையே, 10 மாதமாகி விட்டதால், 'குழந்தையை எங்கே' என்று கேட்டால் என்று சொல்வது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. இதனால், குழந்தை ஒன்றை திருட திட்டமிட்டேன். கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த, பாக்கியலட்சுமி அவரின் மாமியார் ஆகியோரிடத்தில் நன்றாக பேசி அவர்களை நம்ப வைத்தேன். பாக்கியலட்சுமி தனியாக இருந்த போது, மாமியார் குழந்தையை கேட்பதாக கூறி, குழந்தையை கடத்தி சென்றேன்'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்தில் இதே போன்றுதான் நடிகை மீனா தான் கர்ப்பமடைந்திருப்பதாக கூறி குடும்பத்தினரையே ஏமாற்றுவார். தற்போது, அதே போலவே நிஜத்திலும் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments