விண்வெளியில் புதிய தடம் பதிக்கும் நாசா: செவ்வாயில் உயிரினங்களின் தடயத்தை ஆய்வு செய்யப்போகும் பெர்சி

0 7472
விண்வெளியில் புதிய தடம் பதிக்கும் நாசா: செவ்வாயில் உயிரினங்களின் தடயத்தை ஆய்வு செய்யப்போகும் பெர்சி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆய்வூர்தியான பெர்சி, வரும் 18ஆம் தேதி சிவப்புக்கோளில் தரையிறங்குகிறது. விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, பூமிக்கு வெளியே வேறொரு கோளில், சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றையும் நாசா பறக்க விட உள்ளது. செவ்வாய் கோளில், நாசா பறக்கவிட உள்ள ஸ்பேஸ்ஹெலிகாப்டர், பிறகோள்களை ஆய்வு செய்யும் முறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஆறுகளும் ஏரிகளும் நிறைந்ததாக இருந்த செவ்வாயில் நுண்ணுயிரிகளும் பல்கிப் பெருகியிருந்தன என கருதப்படுகிறது. செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வு நோக்கங்களுக்காக இதுவரை 4 ஆய்வூர்திகளை நாசா அனுப்பியுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கோளை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள 5ஆவது ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் (Perseverance) வரும் 18ஆம் தேதி செவ்வாயில் தரையிறங்க உள்ளது.

செவ்வாய் கோளுக்கு நாசா அனுப்பும் 5ஆவது ஆய்வூர்தி என்றாலும், முதல் முறையாக இன்ஜெனியுட்டி (Ingenuity) என்ற பெயரில் மினியேச்சர் ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. ரோபோட்டுகள் வகையை சேர்ந்த ஆய்வூர்தி, மினியேச்சர் ஹெலிகாப்டர் இரண்டுமே செவ்வாய் கோளில், ஜெசோரா கிரேட்டர் (Jezero Crater) என்ற ஏரிப்படுகையில் தரைஇறங்குகின்றன.

ஜெசோரா கிரேட்டர் என்ற பெரும்பள்ளம் ஒரு காலத்தில் நீர்வளம் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, ஜெசோரா கிரேட்டர், செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ளனவா என ஆய்வு செய்வதற்கு மிகவும் பொருத்தமான இடம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஜெசோரா கிரேட்டர் பெரும்பள்ளத்தில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஆறுகள் சேர்ந்து நீர்நிரம்பியதாக இருந்துள்ளது.

ஆறுகள் மூலம் வந்துசேர்ந்த களிமண் தாதுக்களில், புதைபடிவங்களாக நுண்ணுயிரிகளின் எச்சங்கள் காணப்படும். பூமியில்கூட, 350 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, இத்தகைய படிவுகள் (Stromatolite) கண்டறியப்பட்டுள்ளன. செவ்வாயின் ஜெசோரா கிரேட்டரில் அதைத் தேடித்தான் நாசாவின் பெர்சி ஆய்வூர்தி செல்கிறது. அங்கு 15 மைல் தொலைவுக்கு அது மேற்கொள்ளும் ஆய்வுப் பயணத்திற்கான பாதையும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாயின் ஆண்டுக் கணக்கில் ஓராண்டுக்கும், பூமியின் ஆண்டுக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான நாட்கள் பெர்சி செயல்படும். திட்டமிட்ட காலத்திற்குப் பிறகும் அது செயல்பட்டால், 1600 அடி உயரத்தில் உள்ள விளிம்பு பகுதிக்கு மேல்நோக்கி பயணிக்கும்.

சுமார் ஒரு டன் எடை கொண்ட இந்த ஆய்வூர்தி ஒரு எஸ்யுவி கார் அளவு கொண்டதாகும். கேமராக்கள், ரோபோட்டிக் கைககள், மைக்ரோபோன்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் 7 ஆய்வுக் கருவிகளுடன் கூடிய இந்த ஆய்வூர்தி, 2.4 பில்லியன் டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

7 மாதங்கள் பயணித்து செவ்வாய் கோளுக்கு சென்றுள்ள பெர்சி, வரும் 18ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து பின்னர் தரையிறங்குகிறது. 7 மாதப் பயணத்தில் தரையிறங்கும் 7 நிமிடங்கள்தான் முக்கியமானது. இந்த 7 நிமிடங்களில்தான் பெர்சி வெற்றிகரமாகத் தரையிறங்குவது தீர்மானிக்கப்படும்.

பெர்சி, ஜெசோரா கிரேட்டரில் ஆய்வு செய்துடன், மண், தாது மாதிரிகளை பாதுகாப்பாக டியூப்களில் சேகரித்து வைக்கும். எதிர்கால செவ்வாய் பயணங்களின்போது இந்த மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும்.

பெர்சி தரையிறங்கிய சில மாதங்கள் கழித்து, அதன் வயிற்றுப் பகுதியில் கங்காரு குட்டி போல பத்திரமாக இருக்கும் இன்ஜெனிட்டி (Ingenuity) மினியேச்சர் ஹெலிகாப்டர் தரையில் இறக்கிவைக்கப்படும். அதன் பிறகு, பெர்சி பின்னால் நகர்ந்து கொள்ள, இன்ஜெனிட்டி செவ்வாயின் வளிமண்டலத்தில் பறக்கவிடப்பட்டு ஆய்வுசெய்யப்பட உள்ளது.

85 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மினிஹெலிகாப்டர் சோதனை முயற்சி வெற்றிபெற்றால், விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, பூமிக்கு வெளியே வேறொரு கோளில் பறக்கவிடப்பட்ட ஹெலிகாப்டர் என்ற பெயரைப் பெறும். அதுமட்டுமல்ல, பூமியில் இருந்தபடி வேறொரு கோளில் பறக்கும் அமைப்பை இயக்கிய பெருமை கிடைக்கும். எதிர்காலத்தில் பிற கோள்களில் நடத்தப்படும் ஆய்வுகளை புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயின் வளிமண்டலம், பூமியின் வளிமண்டலத்தில் 1 சதவீத அடர்த்தி மட்டுமே கொண்டது. எனவே, வெறும் 1.8 கிலோகிராம் எடை கொண்ட மிகச்சிறிய ஹெலிகாப்டர் என்றாலும், அது மேலெழுந்து பறப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். பூமியில் ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுழல்வதைவிட 8 மடங்கு அதிகவேகத்தில் சுழலும், அதாவது நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 400 முறை எதிரெதிர் திசைகளில் சுழலும் 2 ஜோடி கார்பன்-ஃபைபர் பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் இந்த மினியேச்சர் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஹெலிகாப்டர் செவ்வாயின் வளிமண்டலத்தில் பறப்பது, பெர்சி மூலம் வீடியோ பதிவும் செய்யப்பட உள்ளது.

அறிவுக்கூர்மை, திறமை எனப் பொருள்படும் Ingenuity என்ற பெயரை, இந்த மினியேச்சர் ஹெலிகாப்டருக்கு சூட்டியவர், அமெரிக்காவில் பயிலும் இந்திய வம்சாவளி மாணவியான வனீரா ரூபானி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments