ரூ.2640 கோடியில் கல்லணை கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்

0 1524
ரூ.2640 கோடியில் கல்லணை கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்

கல்லணைக் கால்வாயை இரண்டாயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்துப் புதுப்பிக்கும் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

காவிரியின் குறுக்கே கல்லணையில் இருந்து பிரியும் கல்லணைக் கால்வாயை இரண்டாயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்துப் புதுப்பிக்கும் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயனடைகிற கல்லணைக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாகும் எனத் தெரிவித்தார். நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி சாதனை அளவாக நெல் விளைச்சல் கண்டுள்ள தமிழக விவசாயிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு என்பதை அவ்வையாரின் வரப்புயர நீர் உயரும் என்கிற பாடலை மேற்கோள் காட்டி விளக்கினார்.

கல்லணைக் கால்வாய்ச் சீரமைப்புத் திட்டம் குறித்த குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

காவிரியின் குறுக்கே கரிகால சோழனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை உலகின் பழைமையான அணைகளுள் ஒன்றாகும். காவிரியாறு கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு என மூன்று கிளையாறுகளாகப் பிரிகிறது. கல்லணைக் கால்வாய் 1928ஆம் ஆண்டு முதல் 1934ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வெட்டப்பட்டது. இதன் முதன்மைக் கால்வாய் 148 கிலோமீட்டர் நீளமும் துணைக் கால்வாய்கள் 636 கிலோமீட்டர் நீளமும் கொண்டவையாகும்.

கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 403 ஏரிகளும், 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகின்றன. நீர் மேலாண்மையின் இன்றியமையாமையை உணர்ந்த பிரதமர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவற்றில் ஜல்ஜீவன் மிசன், அடல் பூஜல் யோஜனா, ஆறுகள் இணைப்பு ஆகியவை முதன்மை வாய்ந்தவையாகும். காவிரிச் சமவெளிப் பகுதியில் ஆறுகள், கால்வாய்களைச் சீரமைக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாகக் கல்லணைக் கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் 2640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதன்மைக் கால்வாயின் கரைகளை வலுப்படுத்துதல், 25 கீழ்க் குமிழிப் பாலங்கள், 109 கிணற்று நீர்க் குமிழிகள், 131 சுரங்க நீர்வழிப் பாதைகள், 28 நீரொழுங்கிகள், 20 மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

நீர்மேலாண்மையை நவீனப்படுத்த 108 கோடி ரூபாயில் ஸ்காடா தானியங்கித் தொழில்நுட்பம் இத்திட்டத்தில் செயல்படுத்தப்படும். இந்த நவீனப்படுத்தும் திட்டம் நிறைவடையும்போது கல்லணைக் கால்வாயின் நீர் கடத்தும் திறன் 20 விழுக்காடு அதிகரிக்கும். காவிரி மண்டலத்தில் மன்னன் கரிகாலன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தொலைநோக்கு நீர்மேலாண்மைத் திட்டங்களால் தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments