அர்ஜூன் மார்க் 1ஏ டாங்குகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ஆவடி திண்ணூர்த்தித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி. மார்க் 1 ஏ வகை பீரங்கியைப் பிரதமர் நரேந்திர மோடி ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானேயிடம் ஒப்படைத்தார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அர்ஜுன் எம்.பி.டி. மார்க் 1 ஏ வகை பீரங்கியைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள், திறன்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பீரங்கியை ராணுவத்துக்கு ஒப்படைப்பதன் அடையாளமாகச் சிறிய வடிவில் தயாரிக்கப்பட்ட பீரங்கியைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி பிரதமரிடம் வழங்கினார். அதை ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானேயிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் பீரங்கிகள் வடக்கில் எல்லையைப் பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்படுவது நாட்டின் ஒற்றுமையைக் காட்டுவதாகத் தெரிவித்தார். இந்தியாவில் தமிழகம் வாகனத் தயாரிப்பில் முதலிடம் பெற்றுள்ளதாகக் கூறிய அவர் விரைவில் பீரங்கி தயாரிப்பிலும் முதலிடம் பிடிக்கும் எனத் தெரிவித்தார். பாதுகாப்புத் துறைத் தளவாட உற்பத்தி மண்டலங்களில் ஒன்று தமிழகத்தில் உள்ளதாகவும், அது எட்டாயிரத்து நூறு கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்கிற பாரதியார் பாடலால் ஊக்கம் பெற்றுப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அர்ஜுன் எம்பிடி மார்க் 1ஏ வகை பீரங்கிகளின் செயல்பாடு குறித்த குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.ஒரு பீரங்கியைத் தயாரிக்க சுமார் 60 கோடி ரூபாய் செலவாகிறது. ஒரே முறையில் ஆயிரத்து 610 லிட்டர் எரிபொருளை நிரப்பிக்கொண்டால் 450 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்க முடியும். விமானங்களைச் சுட்டு வீழ்த்தவும், தரை இலக்குகளைத் தாக்கி அழிக்கவும் இந்தப் பீரங்கிகளைப் பயன்படுத்தலாம். தற்சார்புத் திட்டத்தின் கீழ் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 பீரங்கிகளைத் தயாரிக்க ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலைக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. நாற்புறமும் எளிதாகச் சுற்றும் திறன், தடையைக் கடக்கும் திறன், நீர்நிலைகளைக் கடக்கும் திறன், இலக்கைத் துல்லியமாகச் சுடும் திறன் உள்ளிட்ட 71 புதிய சிறப்பியல்புகளை இந்த பீரங்கிகள் பெற்றுள்ளன.
Comments