செயற்கையாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்..மணலியில் மீண்டும் கண்டெய்னர் அட்ராசிட்டிஸ்..!

0 9588

சென்னை மணலி விரைவுச்சாலையில் ஆண்டார்குப்பம் சந்திப்பு பகுதியில் கண்டெய்னர் லாரிகள் சாலையை அடைத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகின்றது. காவல்துறையினர் மக்கள் அவதியை கண்டு கொள்ளவில்லை என்று முன்வைக்கப்படும் புகாரின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடந்தவாரம் முதல் அமைச்சர், வருகையின் போது மணலி விரைவு சாலையில் துறைமுகம் வரையிலும் எந்த ஒரு கண்டெய்னர் லாரியையும் நிறுத்த விடாமல் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். தங்கள் அனுமதியின்றி எந்த ஒரு லாரியையும் வெளியே அனுப்ப வேண்டாம் என்று 23 கண்டெய்னர் யார்டுகளுக்கும் உத்தரவிடப்பட்டது. போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல இடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இரவும் பகலும் கண்டெய்னர் லாரிகள் விதியை மீறி நிறுத்தி வைக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

இது போதாதென்று காவல்துறையினரும் தங்கள் பங்கிற்கு மீண்டும் சாலையில் துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகளை மறித்து வைத்து செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளனர்.

துறைமுகத்திற்கு வரிசையில் செல்லும் லாரிகள் ஒருபுறம் என்றால் சடையங்குப்பம் பகுதியில் உள்ள ஜி.டி.எல், சாத்வா, ஆண்டார்குப்பம் மற்றும் விச்சூர் பகுதிகளில் உள்ள தனியார் யார்டுகளில் இருந்து விதியை மீறி சாலைக்குள் நுழையும் கண்டெய்னர் லாரிகளால் இரு பக்கமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து காவல்துறையினரிடம் முறையான திட்டமிடலும் இல்லை, போதுமான போலீசாரும் பணியில் இல்லை என்று குற்றஞ்சாட்டும் பயணிகள், சர்வீஸ் சாலைகள் செல்லரித்து லாரியை தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல இயலாதபடி குண்டும் குழியுமாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லவில்லை என்ற தவறான தகவலை சொல்லி தங்கள் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஏற்றுமதி பொருளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்வதற்கான அனுமதிச்சீட்டான பார்ம் 13 இல்லாமல் துறைமுகம் செல்ல சாலைகளில் முண்டியடித்துச்சென்று சாலையை அடைத்து நிற்கும் லாரிகளால் தான் இந்த போக்குவரத்து நெரிசல் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். விதியை மீறும் லாரிகளுக்கு அபராதம் விதிக்காமல் விதியை மீறிச்செல்ல போலீசார் அனுமதிப்பதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு மூல காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து விதியைமீறி செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டுகளை கட்டுக்குள் கொண்டுவராமல் கண்டெய்னர் லாரிகளால் உருவாகும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க இயலாது என்பதே கசப்பான உண்மை..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments