மாநில கூடைப்பந்து வீரன் செயின் பறிப்பு திருடனாக மாறிய கதை “ஆன்லைன் ரம்மி”யின் விபரீதம்

0 4677
மாநில கூடைப்பந்து வீரன் செயின் பறிப்பு திருடனாக மாறிய கதை “ஆன்லைன் ரம்மி”யின் விபரீதம்

மாநில கூடைப்பந்து வீரராக இருந்த பொறியியல் பட்டதாரியை ஆன்லைன் ரம்மி விளையாட்டு செயின் பறிப்பு திருடனாக மாற்றிய சம்பவம் கன்னியாகுமரி அருகே அரங்கேறி இருக்கிறது. 

கருங்கல், குளச்சல், இரணியல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், வாகனத் தணிக்கையில் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவனை மடக்கி விசாரித்தனர். அவன் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜஸ்டின் ராஜ் என்பதும், மாநில கூடைப்பந்து வீரர் என்பதும் தெரியவந்தது. ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிய ஜஸ்டின் ராஜ் ஆன்லைன் ரம்மியில் சிறு சிறு தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கியுள்ளான்.

நூறு ஆயிரமாகி, ஆயிரங்கள் லட்சமாக மாறின. தனது தாயாரின் நகைகளையே திருடிச் சென்று இரண்டரை லட்ச ரூபாய்க்கு அடகு வைத்து விளையாட்டைத் தொடர்ந்த ஜஸ்டின் ராஜ், அந்தப் பணத்தையும் இழந்து வழிப்பறிக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். சில தினங்களுக்கு முன்பு மருந்து கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பெண்ணை தாக்கி ஜஸ்டின் ராஜ் செயின் பறித்ததும் தெரிய வந்தது.

கடந்த மாதம் திருவட்டார் காவல் நிலைய எல்லையில் கணவன் மனைவி பைக்கில் சென்ற போது மனைவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகை பறித்ததும், இரணியல் காவல் நிலைய எல்லையில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்ததும் , தக்கலை உட்பட குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

ஜஸ்டின் ராஜை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 10 சவரன் நகைகளையும் வழிப்பறிக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கூடைப்பந்து விளையாட்டில் வாகை சூட வேண்டிய இளைஞனை ஆன்லைன் ரம்மி வழிப்பறி செய்ய வைத்திருப்பது அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments