’எங்க அப்பா மாமூல் கேட்டா கொடுக்கனும்!’ - வசூல் ராஜா தந்தைக்காக கடைக்காரரை அரிவாளால் வெட்டிய மகன்!

சென்னையில், தந்தை மாமூல் வசூலிப்பதைக் குறித்து போலீஸில் புகாரளித்த ஹோட்டல் உரிமையாளரைக் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சேம்பர்ஸ் காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார் அதே பகுதியில் வேதாமெஸ் என்ற உணவகம் ஒன்றை நடத்திவரும் அவர், அப்பகுதி வணிகர் சங்கத்தின் செயலராகவும் உள்ளார்.
அதே பகுதியை, சேர்ந்த யுவராஜ் என்பவர், அப்பகுதியில் உள்ள அணைத்து கடைகளிலும் மாமூல் வேட்டையில் ஈடுபட்டுவந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடை உரிமையாளர்களும் இதுகுறித்து குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, மாமூல் வசூலிக்க வேண்டாம் என்று குமார் , யுவராஜை பலமுறை எச்சரித்தும், யுவராஜ் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் காவல்துறை உதவியை நாடிய குமார் , குரோம்பேட்டை காவல் நிலையத்தில் யுவராஜ் மீது புகார் அளித்தார். பதிலுக்கு, யுவராஜும், குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாக, புகார் அளித்தார். தொடர்ந்து யுவராஜை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழனன்று தன் உணவகத்தில் குமார் இருந்துள்ளார். அப்போது, திடீரென கடைக்குள் நுழைந்த யுவராஜின் மகன் சதீஷும் அவனின் நண்பர்கள் 4 பேரும் அங்கு வந்து குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில், சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரைத் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் குமார், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் குமாரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய யுவராஜின் மகன் சதீஷையும் அவர் நண்பர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பல்லாவரம் மேம்பாலம் அருகே தனது நண்பருடன் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் சதீஷ் என்பதும், குமாரை கத்தியால் குத்தியவர் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, சதீஷையும், மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அவனது நண்பன் சந்துரு என்பவனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குரோம்பேட்டை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments