பட்டாசு ஆலையில் கோர விபத்து: 6 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆலை உரிமையாளர், குத்தகைதாரர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை சக்திவேல் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், 30க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர்.
வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அறையில் வெடிகளுக்கான மருந்தை உட்செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 15-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாகின.
இந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 7 மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ள நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சாத்தூர், சிவகாசி மற்றும் கோவில்பட்டி, மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இறந்தவர்களின் உடல்களில் 6 பேரின் உடல்கள் யாரென்றே அடையாளம் காண முடியாத பரிதாப நிலை உருவாகியுள்ளது.
ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தைகைதாரர் சக்திவேல் உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதோடு 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனக் கேட்டு உறவினர்கள் சிவகாசி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தன மாரியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்ச ரூபாய் காசோலையாகவும், ஈமச்சடங்குக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தாய் - தந்தை இருவரையும் இழந்த சிறுமி நந்தினிக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Comments