பரபரப்பான சாலையில், வாயில்லா ஜீவனிற்காக வாகன ஓட்டிகள் காத்திருப்பு...

கர்நாடகாவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையில், பாம்பு ஒன்று சாலையைக் கடப்பதற்காக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முன்பெல்லாம் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் அவ்வப்போது நம் வீட்டிற்கு விசிட் செய்வது வழக்கம். வாழ்க்கை மெல்ல மெல்ல நகரமயமான பின்னர், இந்த உயிரினங்களை அவ்வளவு சுலபமாகக் காண முடிவதில்லை.
கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள கல்சங்கா பகுதி சாலைகள் காலையும், மாலையும் மிகவும் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை சந்திப்பு ஒன்றில், திடீரென தோன்றிய ஒரு நல்ல பாம்பு சாலையைக் கடக்கத் தொடங்கியது. இதனைப் பார்த்த போக்குவரத்துத்துறை அதிகாரி, பாம்பு பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வேண்டும் என்ற முயற்சியில், வாகனங்களை நிறுத்தும்படி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தினர்.
உடம்பில் சிறு காயங்களுடன் இருந்த அந்த பாம்பு, மெல்ல ஊர்ந்து சாலையைக் கடக்க சுமார் 30 நிமிடங்கள் ஆனது. அதுவரை வாகன ஓட்டிகளும், பொறுமையாகக் காத்திருந்தனர். பாம்பு சாலையைக் கடப்பதைப் பலரும் வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர் .மேலும் சாலையின் மறுபுறம் பாதுகாப்பாக சென்ற பாம்பினை, பாதசாரி ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றார்.
பரபரப்பான உலக வாழ்க்கையில் பொறுமை என்பது காணுதற்கரிய விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், வாயில்லா ஜீவனிற்காக வாகன ஓட்டிகள் 30 நிமிடங்கள் காத்திருந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Comments