பிரதமர் நாளை சென்னை வருகை... விழா ஏற்பாடுகள் மும்முரம்..!

0 2704
பிரதமர் நாளை சென்னை வருகை... விழா ஏற்பாடுகள் மும்முரம்..!

பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதனை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைக்கிறார். நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பார். கல்லணை கால்வாயை புதுப்பித்து, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேரு அரங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளன. மரக் கிளைகள் வெட்டப்பட்டு, மைதானத்தை அழகுபடுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் வருகையையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நிகழ்ச்சிக்கு வரும் அனைவரையும் சோதனை செய்வதற்கு ஆங்காங்கே மெட்டல் டிடக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை ஒழுங்குபடுத்த சவுக்குக் கட்டைகள், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு இடங்களில் இரவுபகலாக போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments