நகை பறிக்க முயன்று ஷர்மிளா அக்காவிடம் நசுங்கிய கொள்ளையன்..! ஃபாரின் ரிட்டனின் பரிதாபம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீடு புகுந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்றவனுடன் போராடிய பெண், கூச்சலிட்டபடியே அவனை உருட்டி நசுக்கியதால் கொள்ளையன் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டான். அவசரமாக கொள்ளையடிக்க முயன்ற துபாய் ரிட்டர்ன், ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட தரமான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பட்டாபி சீதாராமன் தெருவில் வசித்து வரும் ஹரி கிருஷ்ணன் என்பவரது வீட்டிற்குள் வேட்டி அணிந்த மர்ம ஆசாமி ஒருவன் போதையில் நுழைந்தான்.
வீட்டில் தனியாக இருந்த ஹரி கிருஷ்ணனின் மனைவியிடம் உடைந்த பாட்டிலை காட்டி குத்திவிடுவதாக மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எட்டி பறிக்க முயன்றான். அடுத்த நொடி ஆவேசமான ஷர்மிளா, திருடன் திருடன் என்று கூச்சலிட்டபடியே கொள்ளையனை ஓடவிடாமல் பிடித்து இழுத்துள்ளார். இதில் இருவரும் கீழே விழ ஒல்லியாக இருந்த கொள்ளையன் லாரி டயருக்கு அடியில் சிக்கிய எலுமிச்சம் பழம் போல நசுங்கியுள்ளான்.
இதனால் ஜெயின் பறிப்பு முயற்சியை கைவிட்ட அவன் தப்பி ஓட முயன்றான். அப்போது அங்கு வந்த மாதவன் என்பவர் கொள்ளையனை மடக்க அவரது வேட்டியை அவிழ்த்து விட்டு தப்பியுள்ளான். ஓடிய வேகத்தில் அருகில் உள்ள குட்டி சுவற்றில் மோதி தலை சுற்ற தெருவில் விழுந்தவனை பொதுமக்கள் கும்மி எடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையனின் பரிதாப நிலையை பார்த்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பலத்த அடியால் நடக்க முயாமல் கூனியபடியே சென்று ஆம்புலன்ஸில் ஏறி படுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டான் அந்த கொள்ளையன்
விசாரணையில் அவன், கொழுந்துறை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பதும், துபாயில் கொத்தனார் வேலைபார்த்து வந்தவன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளான். சம்பவத்தன்று கட்டிட வேலைக்கு செல்வதற்கு முன்பே மது அருந்தியதால், திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்று ஊராரிடம் தர்ம அடி வாங்கியது தெரியவந்தது.
அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டின் வாசற்கதவுகளை பூட்டிவைக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments