பெட்ரோல் பங்கில் வெட்டரிவாள்... கொள்ளையனுக்கு மாவுக்கட்டு..!
திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டரிவாளால் தாக்கி 25 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்ற 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையனின் கைமுறிந்து மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
திண்டிவனம் - மரக்காணம் சாலை சந்திப்பில் டி.கே.பி. பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த 8ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெட்ரோல் நிரப்பினர்.
பெட்ரோலுக்கு பணம் கொடுக்காத அந்த மர்ம கும்பல், அங்கிருந்த ஊழியர்கள் செந்தில்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரை வெட்டரிவாளால் வெட்டி 25 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றனர்.
இது குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளைக் கும்பலை தேடி வந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க மரக்காணம் கூட்டுசாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் வந்த மூவரை மடக்க முயன்றனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச்செல்லும் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற நபர் பைக்கில் இருந்து கீழே சிலிப்பாகி விழுந்ததால் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விசாரணையில் அவர்கள் ,சென்னை சேலையூர் டான் நவீன்முத்து பாண்டியன், மாடம்பாக்கம் தரணிகுமார்,கணேசன் என்பதும், இந்த மூன்று பேரும் தான் பெட்ரோல் பங்கில் கைவரிசைகாட்டியவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களில் வெட்டரிவாள் ஏந்திய டான் நவீன் முத்து பாண்டியனுக்கு கை ஒடிந்த நிலையில் அவனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மூன்று அரிவாள் ,கத்திகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments