பெற்ற தாயை கதற விட்ட லிட்டில் பிரின்ஸஸ்..! இந்த காதல் பொல்லாதது..!

0 78668
பெற்ற தாயை கதற விட்ட லிட்டில் பிரின்ஸஸ்..! இந்த காதல் பொல்லாதது..!

ஒருவர், காதலனின் கரம்பிடித்தபடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தந்தை நோயால் படுத்துவிட்ட நிலையில் கட்டிட வேலை பார்த்து, 21 வருடம் வளர்த்து, கடன் வாங்கி கல்லூரியில் படிக்க வைத்த தாயை கண்ணீர் விட வைத்த செல்லமகளின் பொல்லாத காதல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் நர்சிங் கல்லூரி மாணவி பவித்ரா. கல்லூரியில் படித்து வரும் நிலையில் இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

தன்னுடைய நண்பரிடம் பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்பதாக வீட்டில் சமாளித்து வந்த நிலையில், உடன் படிக்கின்ற கல்லூரி மாணவர் ஒருவரை பவித்ரா காதலித்து வரும் தகவல் தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்த அவரது தாய் , பவித்ராவிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பவித்ரா சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார். தனது மகளை காணவில்லை என்று பரிதவித்த பவித்ராவின் தாய் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து கவலையுடன் காத்திருந்தார்.

அப்போது, தான் காதலித்து வந்த புதுக்குளத்தை சேர்ந்த மாணவர் பீமாராவ் என்பவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு அங்கு வந்த மாணவி பவித்ரா, தாங்கள் மேஜர் என்பதால் தங்கள் விருப்பபடி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி தாயை அதிரவைத்தார்.

மாணவியின் அண்ணனோ தங்கையின் செயலை கண்டு மனம் நொந்து பதில் பேச இயலாமல் தலைகுனிந்தபடி அருகில் நின்ற நிலையில் , பவித்ராவின் தாயோ, செல்போனை உங்கிட்ட கொடுத்து விடுகிறேன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவனுடன் பேசிக்கொள் என்று கூறி தன்னுடன் வந்து விடும்படி மன்றாடிக் கொண்டிருந்தார்.

2 மாதத்தில் கல்லூரி இறுதி தேர்வை முடித்த பின்னர் இருவருக்கும் தானே திருமணம் செய்து வைப்பதாக கூறி வாக்குறுதி அளித்து தன்னுடன் வருமாறு பவித்ராவை அழைத்தார்.

காதல் கண்ணை மறைத்ததால் எதிரில் நின்ற தாய் கண்ணுக்கு தெரியவில்லை, படிப்பை விட காதல் தான் முக்கியம் என்று காதலனின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தாயுடன் செல்ல மறுத்து அடம் பிடித்தார் அந்த இளம்பெண்!

ஒரு கட்டத்தில் மிகவும் வேதனையடைந்த பவித்ராவின் தாய், இளம்பெண்ணின் சகோதரன் மற்றும் 3 சகோதரிகள் திருமணமாகாமல் இருப்பதை எடுத்துக் கூறினார். கல்லூரி படிப்பிற்காக வாங்கிய கடன்களால் 5 லட்சம் ரூபாய் அளவிற்கு கடனாளியாக நிற்பதாக சொல்லி கதறி அழுதார். அப்போதும் அந்த மாணவியின் மனம் இரங்கவில்லை..!

பல வருடங்களுக்கு முன்பு வாத நோயால் கணவர் வீட்டிலேயே முடங்கிவிட கட்டிட வேலைக்கு சென்று செங்கல் சுமந்து, வட்டிக்கு கடன் வாங்கி தனது மகளை செல்லமாக வளர்த்து கல்லூரியில் படிக்க வைத்ததை எல்லாம் சொல்லி அழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த ஏழைத்தாய்..!

தாயின் கஷ்டத்தை கண்டு பவித்ரா சற்றும் கலங்காமல் தனது காதலனின் முதுகிற்கு பின்னால் சென்று நின்று கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் பிச்சையா பாண்டியனிடம், இருவரும் ஒரே சமூகம் என்பதால் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை என்பதை சுட்டிக்காட்டிய மாணவியின் தாய், படிப்பு முடிந்த பின்னர் அதே இளைஞனுடன் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இதனையும் பவித்ரா ஏற்றுக் கொள்ளவில்லை. தன் மகள் படித்துமுடித்தபின், தான் பட்ட கடனை எல்லாம் தீர்ப்பாள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த ஏழைத்தாயை ஏமாளியாக காவல் நிலைய வாசலில் கைவிட்டு, காதலனுடன் புறப்பட்டுச்சென்றார் அந்த கல்லூரி மாணவி..!

மகள்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் கல்லூரிக் காதல் பொல்லாதது, அதுவரை கொண்ட தாய்ப் பாசம் எல்லாம் அவளிடம் செல்லாது என்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments