ஆசிர்வாதம் வழங்கினால் தங்க மோதிரம் நூதன முறையில் மூதாட்டிகளிடம் நகை பறித்தவன் கைது..!

0 3207
ஆசிர்வாதம் வழங்கினால் தங்க மோதிரம் கிடைக்கும் என கூறி தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை மோசடி செய்து பறித்து வந்த திருடனை சிசிடிவி உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆசிர்வாதம் வழங்கினால் தங்க மோதிரம் கிடைக்கும் என கூறி தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை மோசடி செய்து பறித்து வந்த திருடனை சிசிடிவி உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏமாற்றி பறித்த நகைகளை தனது பெண் தோழியிடம் கொடுத்துவிட்டு கல்லறையில் படுத்திருந்தவன் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், போரூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து நகைகளை திருடிச் செல்வதாக புகார் தொடர்ந்து பதிவானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே பாணியில், திருமலை எனும் ஒரே நபர் கைவரிசை காட்டியது சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து கீழ்பாக்கம் கல்லறையில் பதுங்கியிருந்த திருமலையை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனியாக நடந்து வரும் மூதாட்டிகளின் கவனத்தை திசைத் திருப்பி எவ்வாறு நகை திருடுவான் என்பதை நடித்து காண்பித்துள்ளான்.

கழுத்திலும், காதிலும் நகை அணிந்து தனியாக செல்லும் மூதாட்டிகளை பார்த்தால், வழிப்பறி கொள்ளையன் திருமலை, அவர்களிடம் சென்று அருகில் உள்ள ஏதாவது ஒரு வீட்டை காண்பித்து அது நகை கடை உரிமையாளர் வீடு எனவும், அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு தங்களை போன்ற வயதில் மூத்தவர்கள் வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் செய்தால் தங்க மோதிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறுவான். இதை நம்பி அந்த நபருடன் செல்லும் மூதாட்டிகளை அழைத்துச் சென்று, கழுத்திலும், காதிலும் நகை இருந்தால் மோதிரம் கிடைக்காது என கூறி மூதாட்டி அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கையில் வாங்கிக் கொள்வான். சிறிது நேரத்தில் இன்னொரு மூதாட்டியை அழைத்து வருவதாக சொல்லி அங்கிருந்து நகைகளுடன் தப்பிவிடுவது அவனது பாணி.

இது போன்ற குற்றச் சம்பவத்தில் ஏற்கனவே தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பல முறை கைது செய்யப்பட்டுள்ள திருமலை, சுமார் 2 ஆண்டுகளாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் கடந்த மாதம் பிணையில் வந்த திருமலை, வெளியில் வந்ததிலிருந்து தினமும் ஒரு குற்றச் சம்பவம் என 20 மூதாட்டிகளிடம் நகை பறித்துள்ளான்.

மோசடியாக அபகரித்த நகைகளை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த தனது பெண் தோழியிடம், அவன் கொடுத்து வைத்துள்ளான். இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் திருமலையை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தனியாக வெளியில் வரும் முதியவர்களை குறிவைத்து, திருமலையை போன்று உதவி செய்வது போல் நடித்து நகை பறிக்கும் மோசடி நபர்கள் உலவுவதாக கூறும் காவல் துறையினர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments