ஏரியை குத்தகைக்கு எடுத்து ஐய்யனார் கோயிலை சீரமைக்க முயற்சி; கூவாகம் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கூவாகம் ஏரியில் மீன் குத்தகை எடுப்பதற்கு ஊரேகூடி எடுத்த முடிவுக்கு எதிராக மீன் வளத்துறை யில் முறைகேடு செய்து மற்றோருவர் குத்தகை எடுத்ததால், ஊரார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ள ஊர்தான் கூவாகம். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதுமிருந்து கூத்தாண்டவர் கோவிலில் விழா எடுப்பார்கள். இந்த ஊரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 364 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.
ஏரியில் நீர் நிரம்பியதால் விழுப்புரம் மீன்வளத் துறையினர் கூவாகம் ஏரியில் மீன் வளர்ப்புக்கு ஒப்பந்தம் கோரியிருந்தனர். ஒப்பந்தத்தை பெற கூவாகம் கிராம மக்கள் ஒன்று கூடி ரூ. 3,10,000 என ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தனர். கடந்த மாதம் ஜனவரி 25 ஆம் ஒப்பந்தப்புள்ளி கோர இறுதி நாள். அன்றைய தினத்தில் ஊர்மக்கள் கூடி வேறு யாரும் ஒப்பந்தப்புள்ளி கோராமல் பார்த்துக் கொண்டனர். இந்த ஏரியில் கிடைக்கும் மீன்களை விற்று அதில் கிடைக்கும் வருமுனத்தை வைத்து ஊரில் பாழடைந்து கிடக்கும் ஐய்யனார் கோயிலை சீரமைக்க வேண்டுமென்பது மக்களின் கனவாக இருந்தது.
ஒப்பந்தப்புள்ளி கோரிய தினத்தில் மாலை 5 மணி வரை ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் போடப்பட்டிருந்தது. கணேசன் என்பவரின் பெயரில் கூவாக மக்கள் இந்த ஒப்பந்தத்தை கோரியிருந்தனர். மாலை 5 மணிவரையில் கூவாகம் கிராமத்தில் இருந்து வேறு எவரும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை. ஆனால், அடுத்த நாள் மீன் வளத்துறை அலுவலகத்தில் மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியை திறந்த போது அங்கே இரண்டு மனுக்கள் இருப்பதை கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி பூங்காவனம் ரூ. 4 லட்சத்துக்கு ஒப்பந்தப் புள்ளியை கேட்டு விண்ணப்பித்திருந்தார். மீன் வளத்துறை அலுவல ஊழியர்களின் உதவியோடு இந்த மனுவை பூங்காவனம் பெட்டியில் போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.
Comments