ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தும் வகையில் ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம்

0 1991

அமெரிக்கா நாட்டின் 16ஆவது ஜனாதிபதியாவார் ஆப்ரகாம் லிங்கன். உண்மை, உழைப்பு, நேர்மை, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை தன் வாழ்நாளில் தவறாமல் கடைப்பிடித்ததால், அந்நாட்டின் உயர்ந்த பதவியான அதிபர் (ஜனாதிபதி) பதவியில் மக்கள் அவரை அமரவைத்து அழகு பார்த்தனர்.

இன்று ஆப்ரகாம் லிங்கனின் பிறந்த நாளாகும். இந்நன்னாளில் ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தும் வகையில் அவர் தன் மகனின் தலைமையாசியருக்கு எழுதிய கடிதமானது, காலத்தால் அழியாத பெட்டகமாக இன்றளவும் விளங்கி வருகிறது. அவற்றை இன்றைய தலைமுறையின் மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும். அக்கடிதத்தின் சாரம்சத்தை இங்கே காண்போம்.

“அன்புள்ள தலைமையாசிரியர் அவர்களுக்கு என் மகன் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  உலகில்  எல்லா மனிதர்களுமே நீதிமான்கள் அல்ல ; எல்லோருமே உண்மையானவர்களும் அல்ல ; இதனை நான் நன்கு அறிவேன். ஆனால், ஒருமோசமான மனிதன் இருக்கிறான் என்றால் அதே நேரத்தில் ஒரு வீரனும் இருக்கிறான் என்பதை என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுயநலமிக்க ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இணையாக தன்னையே அர்ப்பணிக்கும் தலைவனும் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு பகைவனுக்கும் இணையாக ஒரு நண்பனும் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். இதற்கெல்லாம் அதிக காலம் ஆகும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கற்றுக் கொடுங்கள். 

image

கீழே கிடக்கின்ற ஐந்து டாலர்களைக் காட்டிலும்,உழைத்துச் சம்பாதிக்கிற ஒரு டாலர் அதிக மதிப்புமிக்கது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். இழப்பதற்குத் தயாராக அவன் இருக்க வேண்டும். வெற்றிகளை அவன் அனுபவிக்க வேண்டும். பொறாமையிலிருந்து அவன் விலகி இருக்க வேண்டும். அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியை, சிரிப்பை, அதன் ரகசியங்களை முடியுமானால் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

புத்தகங்களில் புதைந்து கிடக்கின்ற அற்புதங்களை அவன் அறியட்டும். அதே நேரத்தில் மலையடிவாரங்களின் பசுமை, பூத்துக்குலுங்கும் மலர்கள், வானத்தில் பறக்கும் பறவைகள் இவற்றில் எல்லாம் பொதிந்து கிடக்கின்ற எல்லையற்ற, முடிவற்ற சிருஷ்டி ரகசியங்களை முடியுமானால் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதைக் காட்டிலும், மோசடி செய்வதைக் காட்டிலும் தேர்வில் தவறுவதே (ஃபெயிலாவது) சிறந்தவை என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்!

மற்றவர்கள் எப்படி எதைச் சொன்னாலும் சொந்தமாக உருவாகும் யோசனைகள் - எண்ணங்கள் சிறந்தவை என்பதை அவன் உணருமாறு செய்யுங்கள்! பெருந்தன்மை படைத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் கடுமையானவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ள அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். கூட்டம் கூட்டமாக ஆரவாரத்துடன் ஏராளமானவர்கள் செல்லும்போது அந்த அணியில் சேர்ந்துகொள்ளவே பலரும் துடிப்பார்கள். அது போன்ற மந்தைகளில் - பெரும் ஆரவாரக் கூட்டங்களில் சேராது இருக்கும் வலிமையை எனது மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

யார் என்ன சொன்னாலும் பொறுமையுடன் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டதை எல்லாம் 'உண்மை' என்கின்ற சல்லடையில் சலித்து  வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முறையின் மூலம் பெறப்படுகின்ற கருத்துகள் மட்டுமே ஏற்க வேண்டும். இந்தப் பண்பையும் என் மகனுக்கும் கற்றுக் கொடுங்கள்.

அன்புடன்,

ஆப்ரகாம் லிங்கன்

image

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்பது வள்ளுவர் பெருந்தகையின் ஆணிதரமான கூற்று. ஏனெனில், ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு உயர்ந்த நிலையை எட்டினாலும், அவன் உயிரோடு இருந்தாலும் அவன் உயிரற்றவன் ஆவான் என்பதை திருக்குறள் ஒழுக்கத்தின் மேன்மையை மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் வலியுறுத்துகிறது.

ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்காவின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை எட்டி பிடிப்பதற்கு அவரின் தனிமனித ஒழுக்கமே முன்நின்றது. அதன் பயனாக உலக வரலாற்றில் அவர் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார். மாணவச் செல்வங்களே… ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்பதற்கு ஆப்ரகாம் லிங்கன் முன் உதாரணமாக திகழ்கிறார்.

நாமும் ஒழுக்கத்தின் மேன்மையை உணர்ந்து செயல்படுவோம்…

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments