கெட்டப்பை மாற்றும் நடிகர் விஜய்... வெளியானது ’தளபதி65’ அறிவிப்பு!

நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தைக் கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி65 படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடங்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தியேட்டர்களில் ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது. அமேசான் பிரைம் ஒடிடி தலத்தில் வெளியான போதும் தியேட்டரில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகர் விஜயின் 65 - வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 65 வது திரைப்படத்தைக் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டரைப் போலவே தளபதி65 லும் அனிருத் இசை அமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் யோகிபாபு மற்றும் புகழ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மார்ச் மாதம் முதல் புதிய படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் ஹேர்ஸ்டைல் மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகியவற்றை மாற்றிக்கொண்டு போட்டோஷூட் பணிகளை விஜய் தற்போது முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜயின் புதிய திரைப்பட அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments