உதவும் கரங்களா? திருடும் கரங்களா? ஏடிஎம் மையங்களில் தேவை கவனம்..!

ஏடிஎம் மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து, அவர்களது ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொடுத்து பல லட்ச ரூபாய் திருடி வந்த கும்பல் மதுரை போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் - அன்னபுஷ்பம் தம்பதி கடந்த 8ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர். ஏடிஎம் அறையில் நின்றிருந்த ஆசாமி ஒருவன் அவர்களுக்கு பணம் எடுக்க உதவுவதாகக் கூறி, ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் பொருத்திப் பார்த்துவிட்டு பணம் வரவில்லை எனக் கூறியுள்ளான்.
பிறகு அவர்களுடைய ஏடிஎம் கார்டுக்கு பதிலாக அதேபோல் உள்ள வேறொரு கார்டைக் கொடுத்து தம்பதியை அனுப்பிவிட்டு, அவர்களது கார்டில் இருந்து 57 ஆயிரத்து 600 ரூபாயை எடுத்துள்ளான். வீட்டுக்குச் சென்றபின் வங்கியிலிருந்து வந்த குறுந்தகவலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதி, போலீசில் புகாரளித்துள்ளனர்.
ஏற்கனவே அந்தப் பகுதியில் இருந்து இதே பாணியில் ஏராளமான புகார்கள் வந்திருந்ததால். தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். புகார்கள் வந்த ஏடிஎம் மையங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, தேனி மாவட்டம் சக்கமநாயக்கன் பட்டியை சேர்ந்த தம்பிராஜ் என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், கூட்டாளிகளான சிவா, மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதே பாணியில் அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
ஏடிஎம் மையங்களுக்கு அப்பாவியான தோற்றத்தில் வரும் முதியவர்கள், விவரம் தெரியாதவர்கள்தான் இவர்களின் குறி. அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் பாவனை செய்து,பாஸ்வேர்டு எண்ணை தெரிந்துக்கொண்டு ஏடிஎம் கார்டுகளை சாதுர்யமாக மாற்றி, பணத்தைத் திருடி வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட, பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் செல்லும் முதியவர்கள், விவரம் தெரியாதவர்கள், ஏடிஎம் மையத்தின் காவலாளியை உதவிக்கு அழைக்கலாம். காவலாளி இல்லாத பட்சத்தில், உறவினர்கள் அல்லது நன்கு அறிந்தவர்களின் உதவியை நாடலாமே தவிர, முகம் தெரியாத நபர்களிடம் எக்காரணம் கொண்டும் ஏடிஎம் கார்டையும் அதன் ரகசிய எண்ணையும் கொடுக்கக் கூடாது என்கின்றனர் போலீசார்.
Comments