டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு

மத்திய அரசின் உத்தரவை மதிக்காத டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியின் எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கம் அடங்கிய டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.டி. சட்டம் பிரிவு 69ஏ-யின் படி டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 700 க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை மட்டும் முடக்கியுள்ள டுவிட்டர் நிறுவனம், தனிநபர் உரிமையை மீறியதாகி விடும் என்பதால் சர்சைக்குரிய பல கணக்குகளை முடக்காமல் விட்டு வைத்துள்ளது.
விவசாயிகளின் இன அழிவுக்கு மத்திய அரசு காரணமாக உள்ளது போன்ற வன்முறையைத் தூண்டும் டுவிட்டர் பதிவுகளை நீக்காமலும் டுவிட்டர் அடம் பிடித்து வருகிறது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்வது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தம்மை சந்தித்த டுவிட்டர் அதிகாரிகளான மோனிக் மெக்கே, ஜிம் பேக்கர் ஆகியோரிடம், சர்ச்சைக்குரிய ஹேஷ்டேக்குளை பதிவிடுவது பத்திரிகை சுதந்திரம் அல்ல என்பதுடன் அவை நிலைமையை மேலும் மோசமாக்கும் என ஐ.டி. செயலர் அஜய் பிரகாஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே அரசின் உத்தரவை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Comments