தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்..!

0 1959

தமிழகத்தில் தேர்தல் தேதியை முடிவு செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் செயலாளர் ஷிபாலி சரண் ஆகியோரும் வந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்த தேர்தல் ஆணையர், தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அறிந்தார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட  10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அதிமுக சார்பில் ஆலோசனையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் நான்காவது வாரத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அஞ்சல் வாக்கு அளிக்க அனுமதித்திருப்பதை அதிமுக வரவேற்பதாக அவர் கூறினார்.

தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்,  வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த 10 நாட்களுக்குள் ஓட்டுக்களை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். அதற்கேற்ப தேர்தல் அட்டவணையை தயாரிக்க வேண்டும் என்பதை அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதே போல 11-ந்தேதி காலை 10 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் வங்கி உயர் அதிகாரிகளுடனும்,
காலை 11 மணிக்கு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு மதியம் 1 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments