யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு

தமிழ்நாட்டில், யானைகள் இறப்புத் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதோடு, அதன் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, மாறிப்போவதால், யானைகள் - மனித மோதல்களும் நிகழ்கின்றன.
இதனால், வனத்தில் யானைகள் எண்ணிக்கை குறைவதாகவும், இதனை தடுக்கக்கோரிய, வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதன் பின்னணியில், மிகப்பெரும் மாபியாவே உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
அப்போது, யானைகள் மிகவும் முக்கியமான உயிரினம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன எனச் சுட்டிக்காட்டினர்.
அத்தகைய யானைகளை மூட நம்பிக்கை போன்ற அற்ப காரணங்களுக்காகவும், அவற்றின் தந்தங்களுக்காகவும் வேட்டையாடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.எனவே, தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments