ட்விட்டரிலிருந்து ’கூ’வுக்கு  மாறும் மத்திய அமைச்சர்கள்... கூ’ செயலிக்குப் பின்னால் இருப்பது யார்?

0 9061

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பதிவுகள் மற்றும் கணக்குகளை முடக்குவது தொடர்பாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், பல அமைச்சர்களும், அரசுத் துறைகளும் ட்விட்டர் போன்றே செயல்படும் இந்திய மைக்ரோபிளாக்கிங் செயலியான ’கூ’ விற்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் சர்வதேச நிறுவனங்களின் செயலிகள் மற்றும் பொருட்களுக்கு மாற்றாக இந்தியத் தயாரிப்புகள் பிரபலமடைந்துவருகின்றன. டிக் டாக்குக்கு மாற்றாக சிங்காரி செயலியும் ட்விட்டருக்கு மாற்றாக கூ செயலியும் சமீப காலமாகப் புகழ்பெற்று வருகின்றன. மைக்ரோ பிளாக்கிங் தள தொழில் முனைவோர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பித்வட்கா ஆகிய இருவரும் இணைந்து தொடங்கப்பட்டது தான் கூ செயலி. இதற்கு முன்பு ராதா கிருஷ்ணா ஆன்லைன் வாகனங்கள் முன்பதிவு செய்யும் சேவையான TaxiForSure எனும் செயலியை நிறுவினார். பிறகு, அது ஓலா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

கூ செயலியின் தாய் நிறுவனமான Bombinate Technologies Pvt Ltd இந்திய பதிப்பாக வோகல் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்குகிறது. Blume Ventures, Kalaari Capital and Accel Partners India ஆகிய நிறுவனங்களுடன் இன்போசிஸ் CFO டி.வி மோகன்தாஸ் பையின் 3one4 Capital நிறுவனங்கள் Bombinate Technologies நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.

2020 - ம் ஆண்டின் தொடக்கத்தில் கூ செயலியின் பயன்பாடு தொடங்கப்பட்டபோது, மத்திய அரசின் ஆத்மநிர்பர் செயலிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரிக்கும் ட்விட்டர் பதிவுகள் மற்றும் கணக்குகளை முடக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ட்விட்டர் நிர்வாகம் விதிமுறைகளின்படி மட்டுமே செயல்பட முடியும் என்று பதில்  அளித்தது. இது தொடர்பாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாம் ‘கூ’ வுக்கு மாறி விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கரும் கூ செயலிக்கு மாறினார். அவரது துறைகளான ஐ.டி, தபால் துறை, டெலிகாம் ஆகியனவும் ட்விட்டரிலிருந்து மாறி உள்ளன. அதே போன்று மறைமுக வரி விதிப்பு வாரியம், சுங்கத்துறை, MyGovIndia ஆகியனவும் ‘கூ’ வுக்கு மாறி உள்ளன.

மத்திய அமைச்சர்களின் நடவடிக்கைகள், இந்தியாவில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பயனர்களைக்கொண்ட ட்விட்டரை பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments