கொரோனாவை எட்டி உதைத்த 117 வயது பாட்டி - ஐரோப்பாவில் ஒரு நம்பிக்கைக் கதை!

0 2430
உலகிலேயே மிகவும் வயதான இரண்டாவது பெண்மணியான பிரான்சின் சிஸ்டர் ஆண்ட்ரா, கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.

உலகின் இரண்டாவது மூத்த நபரும், ஐரோப்பிய கண்டத்தின் மூத்த நபருபான, பிரெஞ்சு கன்னியாஸ்திரி சகோதரி ஆண்ட்ரே, கோவிட் தொற்றிலிருந்து தப்பி தனது 117 - பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். 117 வயதில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளது, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 1904 - ம் ஆண்டு பிப்ரவரி 11 - ம் தேதி பிறந்தார் லூசில் ராண்டன் (( Lucile Randon )). 1944 - ம் ஆண்டு கத்தோலிக்க தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்தபோது சகோதரி ஆண்ட்ரே எனும் பெயரைப் பெற்றார். அப்போதிலிருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. ஐரோப்பிய கண்டத்தில் உயிர் வாழ்பவர்களில் மூத்தவராக அறியப்படும் சகோதரி ஆண்ட்ரேவுக்குத் தற்போது 117 வயது ஆகிறது.

இந்த நிலையில் தான் ஜனவரி 16 - ம் தேதி சகோதரி ஆண்ட்ரேவுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சகோதரி ஆண்ட்ரேவுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் தென்படாவிட்டாலும் பாதுகாப்பு காரணத்துக்காகத் தனிமைப் படுத்தப்பட்டார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வெடுத்த  நிருபர் கன்னியாஸ்திரி ஆண்ட்ரேவிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் ’கோவிட் தொற்றினால் பயப்படுகிறீர்களா?’ என்று கேள்வியெழுப்பியபோது, “நிச்சயமாக இல்லை. நான் என்றுமே இறப்பு குறித்து அச்சப்பட்டதில்லை. உங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும், என் பெரிய சகோதரர் மற்றும் என் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேரவும் ஆசையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் தனது 117 வது பிறந்த நாளை சீரும் சிறப்புடன் கொண்டாடியுள்ளார் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. கொரோனாவிலிருந்து மீண்ட தெம்பில் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளை அழைத்து கேக் கொடுத்து தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். 117 வயதிலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு உற்சாகத்துடன் காணப்படும் சகோதரி ஆண்ட்ரே உலகில் கொரோனா நோய்த் தொற்றால் வாடும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்.

Gerontology Research Group's வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் படி சகோதரி ஆண்ட்ரே தான் உலகின் இரண்டாவது மூத்த நபராவார். ஜப்பான் நாட்டின் கேன் தனகா 118 வயதுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகில் அதிக வயதுடன் உயிர் வாழும் நபர்கள் பட்டியலில் உள்ள முதல் இருபது பேருமே பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments