மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரன் நான் - முதலமைச்சர்

மக்கள் தான் முதலமைச்சர் என்றும், மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாக தாம் செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மகளிர் அமைப்பினருடனான கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
மகப்பேறு உதவித் தொகை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தி அரசு கொடுத்துள்ளதால் 67 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என்றார் அவர். மக்கள் தான் முதலமைச்சர், மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாக தான் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடியில் அதிமுக இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவினருடனான
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய் பிரச்சாரத்தை தகவல் தொமில் நுட்ப பிரிவு முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதலமைச்சருடன், வாணியம்பாடி இஸ்லாமியா மகளிர் கல்லூரி மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் திரண்டிருந்த மக்களுக்கு மத்தியில் அதிமுகவுக்கு முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக உண்மையை மறைக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார். சாதிக்காகவும் மதத்துக்காக இல்லாமல் பொதுவான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறினார்.
பொதுமக்களிடம் மனுவை வாங்கினாலும் கூட திமுக தலைவர் ஸ்டாலின் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் குறை தீர்க்கும் திட்டம் இன்னும் பத்து நாளில் தொடங்கப்படும் என்றார்.
அதிமுகவை சிலர் கைப்பற்ற முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதி திட்டம் தீட்டி வருவதாக கூறினார்.
ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என்றும், சசிகலா, தினகரன் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுகமாக, முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments