இத்தாலி புனிதரை மதங்கள் கடந்து வணங்கும் கிராமம்..! களைகட்டியது திருவிழா
போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்து இந்தாலியில் இறைபணி செய்து புனிதராக அறிவிக்கப்பட்ட அந்தோணியாரை சாதி, மதங்கள் கடந்து ஒரு கிராம மக்கள் கொண்டாடிவருகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட தேவாலய குடிசை, மக்களின் பங்களிப்பால் கோபுரமான வரலாறு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் தான் அந்த புனிதரை மதங்களை கடந்து கொண்டாடி வருகின்றனர்..!
போர்ச்சுகல் நாட்டில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ந்தேதி பிறந்த பெர்தினாந்து என்பவர் 15 வயது முதல் இறைபணியில் ஈடுபட்டு இத்தாலியின் பதுவா நகரில் பல அற்புதங்களை நிகழ்த்தியதால் அந்தோணியார் ஆனார்..! 1231 ஆம் ஆண்டு ஜூன் 13 ந்தேதி இறப்பிற்கு பின்னர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டார்..!
சிறப்பு வாய்ந்த புனிதர் அந்தோணியாரின் தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் புளியம்பட்டி கிராமத்தில் வெளிநாட்டு பாதிரியார்களால் அமைக்கப்பட்டது. ஆண்டுகள் பல ஓட இந்த திருத்தலத்தில் உள்ள கிணற்றில் 13 வாளி தண்ணீர் ஊற்றி 13 முறை ஆலயத்தை வலம் வந்து வேண்டினால் தீராத நோய்கள் தீரும், மனநோயாளிகள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உருவானதால் ஏராளமான மக்கள் வருகைதரத் தொடங்கியுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் இன்று கோபுரமாக உயர்ந்து நிற்கும் அந்தோணியார் தேவாலயத்திற்கு சாதி மத பேதமின்றி பல்வேறு மாவட்ட மக்களும் வந்து செல்கின்றனர். இங்கு முதியோர் இல்லமும், சிறுவர்களுக்கான கருணை இல்லமும், இலவச மருந்தகமும் செயல்படுகின்றது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அந்தோணியார் போல அரைவட்டவடிவ மொட்டை அடித்துக் கொள்வது இங்கு வரும் பெரும்பாலான பக்தர்களின் நேர்த்திக்கடனாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது புளியம்பட்டியின் திருவிழா உற்சாகமாக களைகட்டியுள்ளது. வீதியெங்கும் பன்னீர் தூவ, மேளதாளங்கள் முழங்க அந்தோணியார் சப்பரபவனி நடந்தது..!
மகிழ்ச்சியுடன் பங்கேற்ற அனைத்து சமுதாய மக்களும் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர். குறிப்பாக தங்கள் சிறு குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சப்பரத்தேர் வரும் போது அந்தோணியார் ஸ்ரூபத்தின் பாதத்தில் தொட்டு வணங்க செய்வது சிறப்பு அம்சமாகும்
பல நூறு ஆண்டுகள் கடந்தும் புனிதர் அந்தோணியாரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி இன்றும் இந்த ஆலயத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
அதே நேரத்தில் ஆண்டு தோறும் 13 தினங்கள் நடக்கின்ற திருவிழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமானமக்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்திச்செல்கின்றனர்.
Comments