‘பீருக்கு பதில் தயிரைக் குடிக்கச் சொல்வதா?’- துருக்கியில் மதுக்கடை உரிமையாளர்கள் போராட்டம்!

துருக்கியில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட பார் முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி மதுபான விடுதிகளை திறந்து வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடை உரிமையாளர்கள் ஊழியர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நோய்த் தொற்று, இரட்ட இலக்க பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பிரச்னை ஆகியவற்றால் துருக்கி மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் உணவகங்கள், கஃபே, சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுபான கடைகள், பார் மற்றும் இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் கடந்த 11 மாதங்களாகப் பூட்டப்பட்டுள்ளன. இதுவரை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
துருக்கி அதிபர் எர்டோகன் ஆல்கஹாலை வெறுக்கும் தூய முஸ்லிம் பக்திமான் ஆவார். மது அருந்துதல் சமூகத்து எதிரானது என்றும் தார்மீக ரீதியாகத் தீங்கு விளைவிப்பது என்றும் அடிக்கடி பொது இடங்களில் கூறி வருகிறார். துருக்கியர்கள் மது அருந்துவதைத் தவிர்த்துவிட்டுக் குளிர்ந்த தயிரை அருந்துமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிபரின் சொந்த கொள்கை காரணமாகவே மது பான கடைகள் துருக்கியில் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுபான உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் மதுக் கடைகள், பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளைத் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுக்கடை உரிமையாளர்கள் ஊழியர்களுடன் டிரம்ப் வாசித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மதுபான உரிமையாளர்கள், “சுகாதார விதிகளின் கீழ் மதுக் கடைகளைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். கடந்த 11 மாதங்களாக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Comments