தலையணையால் அழுத்தி மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை, ரூ.20 லட்சத்தை அபகரிப்பதற்காக உடன் தங்கியிருந்தவன் வெறிச்செயல்

0 9718
இருபது லட்ச ரூபாயை அபகரிப்பதற்காக, சென்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர், தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருபது லட்ச ரூபாயை அபகரிப்பதற்காக, சென்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர், தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான விக்னேஷ். மாற்று திறனாளியான இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை ஈக்காட்டுதாங்கலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

விக்னேஷை கவனித்து கொள்வதற்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவன், மாத சம்பள அடிப்படையில் உடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளான்.

இந்த நிலையில் திங்களன்று காலை விக்னேஷ் அறையில் இறந்து கிடப்பதாக அவரது உறவினருக்கு ஆறுமுகசாமி தகவல் அளித்துள்ளான்.

மேலும் கிண்டி போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளான். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகசாமியிடம் விசாரணை நடத்தினர்.

விக்னேஷிற்கு ஏற்கெனவே இதய கோளாறு இருந்து வந்ததாகவும், பல மாதங்களாக விக்னேஷ் சிகிச்சை பெற்று வந்ததாகவும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசாரிடம் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளான்.

விக்னேஷின் முகத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஆறுமுகசாமியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மாற்று திறனாளியான விக்னேஷிற்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரை இருந்ததை அறிந்து, அந்த பணத்தை அபகரிக்க ஆறுமுகசாமி திட்டமிட்டுள்ளான்.

தனது நண்பரான நாராயணனுடன் சேர்ந்து பணத்தை அபகரிக்க விக்னேஷிற்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் விக்னேஷ் அதை அலட்சியப்படுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் வேறு வழியில் பணத்தை அபகரிக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதை பயன்படுத்தி, விக்னேஷை கொலை செய்து விட்டு, ஆன்லைன் மூலம் பணத்தை அபகரிக்க ஆறுமுகசாமியும் நாராயணனும் திட்டமிட்டுள்ளனர்.

வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது தலையணையை வைத்து விக்னேஷின் முகத்தில் அழுத்தி கொலை செய்ததாக ஆறுமுகசாமி வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் இறந்ததாக நம்பவைக்க நாடகமாடியதும் அம்பலமானது.

பணத்திற்காக கூட இருந்தே கொலை செய்த ஆறுமுகசாமி மற்றும் கொலை செய்ய தூண்டியதாக அவனது நண்பன் நாராயணனை போலீசார் கைது செய்தனர்.

அதிக அளவு பணத்துடன் குடும்பத்தினர், உறவினர்கள் இன்றி தனியாக வசிப்பவர்கள், உஷராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments