சிறுவனுக்கு ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன்... பெற்றோரிடத்தில் கூறி விடுவதாக நண்பர்கள் மிரட்டியதால் மாயம்!

0 42299

ரூரில் ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்கள் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் சிறுவன் வீட்டை விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலை, சத்திய மூர்த்தி நகரில் வசிக்கும் ஒருவர்  மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், 15 வயதில் மகனும் உள்ளனர். மகன் 10- ம் வகுப்பு படித்து வருகிறான். கொரனோ கால கட்டம் என்பதால் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்காக, சிறுவனுக்கு பெற்றோர் ஆன்ராய்ட் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.  படிப்பு நேரம் போக, மீதமுள்ள நேரங்களில் ப்ரி பயர் ஆன் லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து சிறுவன் விளையாடி வந்துள்ளான். குழு விளையாட்டு என்பதால் முன்பின் அறிமுகம் இல்லாத சிறுவர்களுடன் சேர்ந்து சிறுவன் விளையாடியுள்ளான். இதற்காக, 3- க்கும் மேற்பட்ட கணக்கை சிறுவன் தொடங்கியுள்ளான். 

இதில்,  சிறுவன் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடன் விளையாடும் சக சிறுவர்களிடம் பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடியும், அவற்றை திரும்ப செலுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளான். கடந்த சில மாதங்களில்  சுமார் 4500 பாய்ண்ட்ஸ் கடனாகப் பெற்று விளையாடியுள்ளான். அவற்றை, சிறுவனால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடனை ஈடுகட்ட தான் பயன்படுத்திய 2 கணக்குகளை மற்ற சிறுவர்களுக்கு வழங்கியுள்ளான் .

இதற்கிடையே, பெற்றோர் ஆன் லைனில் அதிக நேரம் இருக்கிறாய் என்று சிறுவனை எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து சிறுவன் ஆன்லைன் விளையாட்டை விளையாடியதால் பெற்றோர் செல்போனை வாங்கி ஆப்களுக்கும் பாஸ் வேர்ட் போட்டுள்ளனர். போன் வந்தால் மட்டும் பேசிக் கொள்ளும் படி சிறுவனின் கையில் கொடுத்து வைத்துள்ளனர். சிறுவன் ஆன்லைன் விளையாட்டு விளையாட முடியாத நிலையில், 4500 பாயிண்ட்டுகளை கடன் கொடுத்த 3 மற்ற சிறுவர்களும் தங்கள் பாயிண்டுகளை திரும்பத் தருமாறு சிறுவனை கேட்டுள்ளனர். இல்லையென்றால், உங்கள் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறி விடுவோம் என்றும சிறுவனை மிரட்டியுள்ளனர்.  

இதனால், பயந்து போன சிறுவன் தன் குழு சிறுவர்கள் பேசிய செல்போன் எண்களை ப்ளாக் செய்து வைத்துள்ளான். இந்த நிலையில் மன உளைச்சலுக்குள்ளான சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் செல்போனில் கேமராவை ஆன் செய்து, 'அம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உன்னை விட்டு செல்கிறேன் என்னைத் தேட வேண்டாம்' என வீடியோ ரெக்கார்ட் செய்து வைத்து வீட்டு ரூ. 100 பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6- ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் திருச்சி சென்றுள்ளான். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் சுற்றியுள்ளான். யாராவது அவனைப் பற்றி கேட்டால், தனக்கு யாரும் இல்லை என்று கூறியுள்ளான். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் சிறுவன் உறங்க இடம் கொடுத்துள்ளார். ஆனால், பசியால் தூங்க முடியாத நிலையில் அருகிலிருந்த பானிப்பூரி கடைக்காரரிடம் சென்று தனக்கு பசிப்பதாகவும், கையில் காசில்லை என்று கூறி சாப்பிட பானிபூரி கேட்டுள்ளான். பானிப்பூரி கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். அருகிலிருந்தவர் சிறுவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவனுக்கு பானி பூரி வாங்கி கொடுத்து, செலவுக்கு ரூ. 100 பணம் கொடுத்து அவனை நம்ப வைத்து பிறகு சிறுவனை திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதற்கிடையே, சிறுவன் வீட்டுக்கு வராததால் அவனது செல்போனை எடுத்து பெற்றோர் பார்த்துள்ளனர். அதில், சிறுவன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பல இடங்களிலும் பெற்றோரும், உறவினர்களும் தேடி அலைந்தும் சிறுவன் கிடைக்காததால் அழுது புலம்பியபடி இருந்தனர்.

சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவனை தேடி வந்தனர். தொடர்ந்து 7 ஆம் தேதி இரவில் சிறுவனை திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு மனநல சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனை மிரட்டிய அவனின் 3 நண்பர்களை தாந்தோன்றிமலை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments