'கொரோனா - அப்படினா என்ன?' - கோமாளி படத்தைப் போன்று இங்கிலாந்தில் ஒரு நிஜ சம்பவம்!

0 7336

கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி சுமார் 16 ஆண்டு காலம் கோமாவில் இருந்துவிட்டு கண் விழிக்கும் போது, மாறிவிட்ட உலகத்தைப் பார்த்து பேந்த பேந்த விழிப்பார். அவரைப் போலவே, இங்கிலாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கொரோனா, ஊரடங்கு குறித்து எதுவும் தெரியாமல் விழித்து வருகிறார்.

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப் ஃப்ளேவில். தீவிர விளையாட்டு வீரரான ஜோசப், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1 - ம் தேதி இங்கிலாந்து நகரமான பர்டன் - ஆன் - ட்ரெண்ட்  எனும் நகரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது ஜோசப் ஃப்ளேவில் படுகாயமடைந்தார். மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமோ நிலைக்குச் சென்றார். ஜோசப் ஃப்ளேவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டோக் ஆன் ட்ரெண்டில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஜோசப்பை சேர்த்த பெற்றோர், சிகிச்சை செலவுக்குப் பிரச்சாரம் செய்து நிதி திரட்டினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இரண்டு முறை ஜோசப்புக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. ஆனாலும், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாகப் பெற்றோரால் மகனுடன் தங்கியிருக்க முடியவில்லை. அதனால், அடிக்கடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே மகனைப் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் தான் சுமார் 11 மாத சிகிச்சைக்குப் பிறகு ஜோசப்புக்கு நினைவு திரும்பத் தொடங்கியுள்ளது. கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிறிது சிறிதாகப் பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் மட்டுமே எட்டிப் பார்க்கும் பெற்றோர், கொரோனா நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கு உத்தரவு குறித்தும் கூறிய போது கோமாளி திரைப்படத்தில் கோமாவிலிருந்து கண் விழித்த ஜெயம் ரவியைப் போல பேந்த பேந்த முழித்துள்ளார் ஜோசப்.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனை ஊழியர்களும், பெற்றோர்களும் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற நிகழ்வுகளை சிறிது சிறிதாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஜோசப்பின் அத்தை, “ஊரடங்கு உத்தரவு குறித்த கதைகளை ஜோசப் எப்போது புரிந்துகொள்வார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ஜோசப் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற பிறகு, இங்கிலாந்து நாட்டில் மட்டும் சுமார் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகத்தை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைகீழாக மாறியுள்ள உலக மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஜோசப் புரிந்துகொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments