பில்லிங் பேப்பரில் 148 அடி நீள ஓவிய தொகுப்பு வரைந்து தமிழக மாணவி சாதனை!

திண்டுக்கல் மாவட்டத்தில் கலைக்கல்லூரி மாணவி ஒருவர் 148 அடி நீளமுள்ள ஓவிய தொகுப்பினை வரைந்து அசத்தியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் பலரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. உலக பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. வெளியில் சுற்றித் திரிந்த பலரும் வீட்டில் முடங்கிக்கிடக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் தன்னம்பிக்கை மிகுந்த சிலர், இந்த கொரோனா காலத்தை தங்களால் முடிந்த அளவுக்குப் பயனுள்ளதாக மாற்றினர் .
அவர்களுள் ஒருவர் தான் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மதனபுரம் பகுதியைச் சேர்ந்த சோபியா. சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட சோபியா, தற்போது பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் 148 அடி நீளமுள்ள ஓவிய தொகுப்பு ஒன்றை பில்லிங் பேப்பர் கொண்டு வரைந்துள்ளார். ஐநூற்றி இருபது ஓவியங்கள் அடங்கிய அந்த தொகுப்பினை, வரைந்து முடிக்க சோபியாவிற்கு 100 நாட்கள் தேவைப்பட்டது .
எனது பூமி என்று தலைப்பில் வரையப்பட்ட அந்த ஓவியங்களில், பல நாடுகளின் தேசியக் கொடிகள், தேச தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.தற்போது மாணவி சோபியாவின் ஓவிய தொகுப்பு பொது மக்கள் பார்வைக்காகப் பழனி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஓவியத்தைப் பார்வையிட வரும் பொது மக்கள் அனைவரும் மாணவி சோபியாவை வெகுவாக பாராட்டிச் செல்கின்றனர்.
இதைப் பற்றி மாணவி சோபியா கூறுகையில், தனது ஓவியத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,மேலும் தான் வரைந்த ஓவியத்தை உலக சாதனைக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் பலரும் பெருவாரியான நேரத்தை ஆன்லைன் கேம் விளையாடிக் கழித்தபோது, பெருந்தொற்று காலத்திலும் கலையில் ஆர்வம்கொண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்த சோபியா போன்றவர்கள் சக இளஞ்சர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சந்தேகமும் இல்லை.
Comments