புதுச்சேரியில் புதுவரவு லவ் லாக் ட்ரீ... காதல் உறுதியுடன் நிலைக்க பூட்டுப்போடும் காதலர்கள்!

0 5273

காதலர்களின் அடையாள சின்னமாக விளங்கும் பாரிஸ் சைனி ஆற்றில் உள்ள காதலர் பாலம் போல, காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது புதுச்சேரியின் புதுவரவான இந்த Love Lock Tree. 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்த காதலர்களுடன் நம் நாட்டு காதலர்களும் பூட்டுபோட்டு வளர்த்து வரும் காதல் சொட்டும் காதலர்களின் மரத்தை பற்றி பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

காதல் என்பது காலத்தால் அழியாதது அழிக்க முடியாதது. ஆதாம் ஏவால் காலம் முதல் இன்றுவரை மாற்றங்களுக்கிடையேயும் மாறாமல் பூமியில் உள்ள உயிர்களிடையே உயிரோட்டத்துடன் பூத்து குலுங்குவது காதல் மட்டுமே. உலகில் காதலை அனுபவிக்காத மனிதர்களை காண்பது மிகவும் அரிது. தனக்கு பிடித்தவரிடத்தில் பேசி பழகி அன்பை பொழிந்து அதை ரசித்து மகிழ்வது காதலுக்கும், காதலிப்பவர்களுக்குமே உண்டான தனிச்சிறப்பு.

காதல் இல்லையேல் உலகு இல்லை என்று கூறுவதுண்டு. அந்த அழகிய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலிக்கும் அனைவரும் தங்களது காதலிக்கோ, காதலனுக்கோ எத்தனையோ விதவிதமான நினைவு பரிசு அளித்து மகிழ்வர். தங்களது காதலை அடுத்த தலைமுறைகளுக்கு அழியாத நினைவு சின்னமாய் கடத்தி விட்டு சென்ற காதல்கள் இங்கு எத்தனையோ உண்டு. உலக அதிசயமான தாஜ்மஹால் முதல் பொட்டிக்காட்டில் காதலர்கள் பெயர்களை தாங்கி நிற்கும் கள்ளிச்செடி வரை சொல்லப்பட்ட, சொல்லப்படாத எத்தனையோ காதல்கள் நமது மண்ணிலும் உள்ளன.

உலகம் முழுவதும் தங்கள் காதல் நீடிக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான நம்பிக்கைகளை காதலர்கள் பின்பற்றி வருவர். அதேபோல் காதலுக்கு பெயர்போன பிரான்சிலும் தங்களது காதல் நீடிக்க வேண்டும் என்பதற்காக தலைநகர் பாரிசில் உள்ள சைனி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் காதலர்கள் பூட்டுபோட்டு சாவியை ஆற்றில் வீசியும், அதனை பத்திரப்படுத்தியும் வந்தனர். பின்னர் காதலர்களின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறியதால் அங்கேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் அங்கு அடிக்கடி நிகழ்வதுண்டு. நாளடைவில் பாலம் முழுவதும் பூட்டுகளால் நிரம்பியதை அடுத்து அதனை தடுக்கும் வகையில் தற்போது பூட்டுப் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அங்குள்ள லவ் லாக் ட்ரீ எனப்படும் கம்பங்களில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் இன்றும் பூட்டு போட்டுக்கொண்டுதான் வருகின்றனர்.

image

இந்த நிலையில் வீதிகள், கட்டிடங்கள் என பிரான்சின் கலாச்சாரத்தை இன்றுவரை அப்படியே பிரதிபலித்து வரும் புதுச்சேரியிலும் தற்போது ஒரு லவ் லாக் ட்ரீயை நிறுவியுள்ளார் சுய்ப்ரேன் வீதியில் crepe உணவகம் நடத்தி வரும் சதீஷ். இப்போது வரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்த காதலர்கள் கடையின் முன்னே இருக்கும் கம்பத்தில் பூட்டுப்போட்டு தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேசம் கடந்த நேசங்கள் பூத்து குலுங்கும் லவ் லாக் ட்ரீ முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

தங்கள் காதலின் அடையாளத்திற்கு பூட்டுப்போடும் கலாச்சாரம் நமது மண்ணின் காதலர்களிடமும் புகுந்து தற்போது புகழ்பெற்று வருகின்றது. சமீபத்தில் புதுச்சேரியில் Love Lock Tree இருப்பதை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த மதுரையை சார்ந்த கார்த்திக்-மெருளாலினி தம்பதியினர் நேரில் வந்து பூட்டு போட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். அதேபோல் தற்போது எண்ணற்ற காதலர்களும் இங்கே வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுய்ப்ரேன் வீதியில் உள்ள இந்த லவ் லாக் ட்ரீ தற்போது காதலர்களின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.

உலகில் காதலர்களின் அடையாள சின்னமாக விளங்கும் காதல் சொட்டும் இடங்களின் வரிசையில் கூடிய விரைவில் புதுச்சேரியின் புதுவரவான இந்த லவ் லாக் ட்ரீயும் இடம்பெற்று விடும் என்பதே தவிர்க்க முடியா நிதர்சனம்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments