மதுரையில் காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி தப்பியோட்டம்... மயிலாடுதுறை இளைஞர் சென்னையில் கைது!

0 4116

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது மதுபோதையில் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த இளைஞரை காருடன் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் நந்தகுமார்.  கடந்த ஞாயிறன்று இரவு வழக்கம் போல் தெப்பக்குளம் பகுதியில் அவர்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஒரு சொகுசு கார் வந்தது. அதனைக் கண்ட ஆய்வாளர் நந்தகுமார் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், சொகுசு காரில் வந்தவர்கள் நிற்காமல் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

கார் மோதியதில் அவருக்கு தலை, கால் மற்றும் முழங்கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில்  உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கார் எண்ணை வைத்து குற்றவாளியை தேடும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில்,  காரை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியது மயிலாடுதுறையை சேர்ந்த 29 வயதான இளைஞர் விமல்ராஜ் என்பது தெரிய வந்தது.  மது போதையில் இருந்த விமல்ராஜ், காவல் ஆய்வாளர் வாகனத்தை நிறுத்த முயற்சித்ததால், அவர் மீது காரை ஏற்றி விட்டு  நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் மோதிவிட்டு சென்ற காரின் எண் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, மதுரையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு காரை ஓட்டி சென்ற  விமல்ராஜை போலீஸார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments