அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்தோ, பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தென்சீனக் கடல் முதல், இந்திய- சீன கடல் எல்லை வரையிலான, சீனாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து பேசியதாக மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பைடனைக் கேட்டுக் கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பருவநிலை மாற்ற ஒப்பந்ததில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ள தருணத்தில், இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேசியதாக மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Comments