'சொல்றார்லா கால்ல முத்தம் கொடுத்து மன்னிப்பு கேள்!'- இளைஞரை அடித்தே கொலை செய்த கும்பல்

0 26989

கோவையில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்னபுரி நாராயணசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மணிகண்டன்(வயது 23). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். கஞ்சா விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது போலீஸ் என சிலர் வந்து அவரை அழைத்து சென்றனர். மறுநாள் மணிகண்டனின் தாயார் மீனா போலீஸ் நிலையம்  சென்று விசாரித்தபோது போலீசார்  தன் மகனை  அழைத்து செல்லவில்லை என்று தெரிந்து கொண்டார். 
 

இந்தநிலையில் ,  27ஆம் தேதி காலையில் கோவை அரசு மருத்துவமனையில் மணிகண்டன் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து , மேட்டுப்பாளையம் போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மணிகண்டனை கடத்திச் சென்றவர்கள் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே வைத்து மணிகண்டனை  தாக்கியுள்ளனர். இதனால், 29-ஆம் தேதி காலை மணிகண்டனுக்கு கடுமையான வயிற்றுவலி மற்றும் ரத்த வாந்தி எடுத்த காரணத்தினால்  தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு, மணிகண்டன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில், மணிகண்டன் ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. கஞ்சா விற்ற வழக்கில் மணிகண்டன் சிறை சென்ற  சமயத்தில் , அந்த பெண் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறையிலிருந்து வெளிவந்த மணிகண்டனுக்கு இந்த தகவல் தெரிந்தது. உடனே , மணிகண்டன் சுரேஷிடம் சென்று , 'உன் மனைவி தன் காதலி என்றும் அவளை என்னுடன் அனுப்பி விடு ' என்று கூறியிருக்கிறார். 'அப்படி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவேன் ' என்று சுரேசை மணிகண்டன் மிரட்டியிருக்கிறார்.

இதனால், பயந்து போன சுரேஷ் தன் நண்பர்கள் சுஜித் மற்றும் மேலும் சிலருடன் இணைந்து மணிகண்டனை துடியலூர் போலீஸார் என்று கூறி வீட்டிலிருந்து   அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மணிகண்டனை தனி இடத்தில வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மூன்று வீடியோக்கள்  வெளியாகியுள்ளன. முதல் வீடியோவில் காருக்குள் வைத்து மணிகண்டனை அடிக்கின்றனர். அடுத்த வீடியோவில் மணிகண்டனின் நெஞ்சில் உள்ள பச்சை குத்திய எழுத்துக்களை காட்ட சொல்லி மிதிக்கின்றனர். மணிகண்டன் அடி தாங்காமல் கெஞ்சுகிறார். ஆனால், கொஞ்சமும் இரக்கம் காட்டாத கும்பல் காலில் முத்தமிட்டு மன்னிப்பு கேட்க சொல்கிறது. தொடர்ந்து , ஒருவர் காலை நீட்ட மணிகண்டன் அவர் காலை முத்தமிட்டு மன்னிப்பு கேட்கிறார்.இருந்த போதும் அந்த கும்பல் தொடர்ந்து தாக்குகின்றது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டனை காரில் கடத்தி அடித்து கொலை செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments