மார்பிங் செய்வதே பொழுதுபோக்கு... அதற்காகவே பிரத்யேக செயலி - போலீசில் சிக்கிய சில்வண்டு!

0 18145

சென்னை, பேஷன் டெக்னாலாஜி கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கோவை கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலாஜி படித்து வருகிறார். பொழுதுபோக்குக்காகவும், படிப்பு சம்பந்தமான தகவல்களைப் பெறவும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், யாரோ ஒரு நபர் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராமிலிருந்து மாணவியின் புகைப்படத்தை எடுத்து, வேறு ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து வெளியிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் ராயப்பேட்டை, மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டப்பிரிவு மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினருடன் இணைந்து தொழில் நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், மார்பிங் செய்து புகைப்படத்தைப் பதிவேற்றிய நபரின் ஐபி முகவரியை வைத்து சேலம் அஷ்தப்பபட்டியைச் சேர்ந்த 19 வயதான பரசுராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரசுராமன் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். பரசுராமனின் தந்தை ஆடை ஏற்றுமதி தொழிலதிபர் ஆவார். வசதியான குடும்பம் என்பதால் மாணவன் பரசுராமனுக்கு விலை உயர்ந்த செல்போன், வீட்டில் தனி அறை என வசதிகள் இருந்ததால் ஆபாச இணைய தளங்களைப் பார்ப்பதும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்வதற்கென்றே பிரத்யேக செல்போன் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதில் பல இளம் பெண்களின் படங்களை மார்பிங் செய்வதைப் பொழுதுபோக்காகச் செய்து வந்துள்ளார்.

பல இளம் பெண்களின் புகைப்படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, மார்பிங் செய்து வைத்திருந்ததைப் பார்த்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்து, சைபர் லேப் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, போலீசார் பரசுராமனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments