பி.டெக் படிப்பதற்காக கூலி வேலைக்கு சென்ற ஒடிசா மாணவி... நேரில் சென்று உதவிய திமுக எம்.பி!

பிடெக் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை செலுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைசெய்த ஒடிசா மாணவியின் சொந்த ஊருக்கு நேரில் சென்று ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த தர்மபுரி மக்களவை உறுப்பினருக்கு பலரும் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசாவின் பூரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி, ரோஸி பெஹெரா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியான இவர் கடந்த 2019 - ம் ஆண்டு கட்டிட பொறியியலில் டிப்ளமோ படிப்பைப் படித்துள்ளார். அதற்கு ரூ24,500 ரூபாய் நிலுவைத் தொகை கட்ட முடியாத காரணத்தால் டிப்ளமோ முடித்ததற்கான சான்றிதழை அவரால் பெற முடியவில்லை.
டிப்ள்மோ முடித்த மாணவிக்கு, பி.டெக் படிக்கும் ஆர்வம் இருந்தும் ரோஸி பெஹெராவால் குடும்ப வறுமை காரணமாகப் படிக்க முடியவில்லை. ஆனாலும், மனம் தளராத அவர் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் தினக்கூலியாக ஒரு நாளைக்கு ரூ.207 என்ற சம்பளத்தில் வேலைக்கு சென்று வந்தார். அவருடன் சேர்ந்து அவரது இரு தங்கைகளும் 100 நாள் வேலை திட்டத்தில் தினக் கூலி சம்பளத்திற்கு வேலைப்பார்த்து வந்தனர்.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருகிறார் என்ற செய்தியை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிந்த தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் மாணவியின் சொந்த ஊருக்கு நேரில் சென்று ரூ.1 லட்சம் நிதியை வழங்கியதோடு, படிப்புச் செலவுக்கான வங்கிக் கடனையும் ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.
இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பழங்குடி பெண்ணுக்கு துரிதமாக உதவிய தி.மு.க எம்பி செந்தில்குமாரின் மனிதாபிமான இந்த செயலை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Comments