விவசாயிகள் படும் கஷ்டம் தேர்தல் வரும்போதுதான் முதலமைச்சருக்கு தெரிந்ததா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

விவசாயிகள் படும் கஷ்டம் தேர்தல் வரும்போதுதான் முதலமைச்சருக்கு தெரிந்ததா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக சார்பில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக மாவட்டத்தில் சாதனை பெற்ற கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்வதாக 2016ஆம் ஆண்டில் அதிமுக அரசு ஒரு நாடகத்தை நடத்தியதாக குற்றம்சாட்டினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியை டம்மி அமைச்சராக அதிமுகவினர் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், பட்டியல் இனத்தவர்களுக்கு இதுவரை எந்தவித பயனும் சென்றடையவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆரை தாம் சிறுவயதில் இருந்தே அறிவேன் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் சினிமாவில் மட்டுமே அவரை பார்த்திருப்பார்கள் என்றும் கூறினார்.
Comments