இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை பற்றிப் பேசும் விஜய்.. இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் பட வசனங்கள்!

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் தற்போது ரசிகர்கள் பலராலும் இணையத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, மகேந்திரன் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்குப் பின் கடந்த மாதம் 13ம் தேதி பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. தமிழகத்தில் மட்டுமன்றி பல்வேறு இடங்களில் சுமார் 90% திரையரங்குகளில் வெளியான 'மாஸ்டர் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் கொரோனா ஊரடங்கால் உறங்கி கொண்டிருந்த திரையரங்குகளை மக்கள் வெள்ளத்தால் தட்டியெழுப்பியது மாஸ்டர் திரைப்படம்.
ரசிகர்கள் மத்தியில் பலத்த வரப்பேற்பை பெற்ற இத்திரைப்படம் இதுவரை பல சாதனைகளைப் படைத்தது. உலகளவில் வெளியான இத்திரைப்படம் ரூ.250 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும் ரூ. 141 கோடி வசூல் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 80 கோடி வசூல் செய்திருந்த பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை மாஸ்டர் படம் தகர்த்து வசூல் சாதனை செய்துள்ளதாகவும் நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே வெளியான 16 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி யூடியூபில் வெளியானது. திரைப்படத்தில் பேராசிரியராக நடித்துள்ள விஜய் வகுப்பறை ஒன்றில் வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பார். அப்போது அவர் ”பிரஷரான சுழ்நிலையிலையும் கூலாக முடிவு எடுப்பதால் தான் தோனியை ’கேப்டன் கூல்’ னு கூப்புறோம்.” அப்படின்னு பேசியிருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய இந்த வசனம் தற்போது வைரலாகி வருகிறது.
அதோடு ’இன்னும் எத்தனை நாளைக்கு தான் பெண்கள் ஆடைக்குறித்து விமர்சனம் செய்து கொண்டே இருப்பீங்க?” என்று பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு சாக்காக சொல்லப்படும் ஆடை விமர்சனம் குறித்து பேசியிருப்பதும் பாராட்டை பெற்றுள்ளது. திரைப்படத்தில் பேசப்படும் பல வசனங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது நீக்கப்பட்ட காட்சியில் இடம்பெற்ற இந்த வசனங்களும் இணையத்தில் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
Comments