சிட்டாக பறந்த மஜ்னு.. டிக்கெட்டால் சிக்கிய லைலா..! இதுவும் காதல் கோட்டை தான்

0 14646
சிட்டாக பறந்த மஜ்னு.. டிக்கெட்டால் சிக்கிய லைலா..! இதுவும் காதல் கோட்டை தான்

சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்பி வைக்க வந்த இளம் பெண் ஒருவர், விமானம் ஏறும் வரையிலும் கணவர் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில், போலி விமான டிக்கெட் தயாரித்து சென்னை போலீசில் சிக்கிக் கொண்டார். திருமணமான சில தினங்களில் தன்னை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவரை சில நிமிடங்கள் கூட பிரிய மனமில்லாமல் பாசக்கார மனைவி எடுத்த ரிஸ்க் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த 25 வயது இளைஞர் நவாஸ் சேக் மற்றும் 23 வயதான அவரது மனைவி சனா இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

விமான பயணிகளுக்கான இ டிக்கெட்டை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு உள்ளே சென்றனர். அத்தோடு அதே டிக்கெட்டை காண்பித்து பாதுகாப்பு சோதனை பகுதிக்குள்ளும் இருவரும் ஒன்றாகவே சென்றனர்.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம் பெண் சனா மட்டுமே தனியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்த போது தான் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக சனா தெரிவித்தார்.

தனது கணவர் மட்டுமே விமானத்தில் பயணிக்கிறார் என்று கூறிய சனா, தான் விமான நிலையத்திற்குள் செல்லும் போது கேட்டில் காண்பித்து விட்டு சென்ற இ டிக்கெட்டையும் காண்பித்தார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. அந்த டிக்கெட்டில் ஒரு பயணிக்குரிய பி.என்.ஆர் எண் மட்டுமே இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் , சனாவை வெளியில் விடாமல் தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் கணவருக்கு பெறப்பட்ட இ-டிக்கெட்டில் தன்னுடைய பெயரை சேர்த்து கலர் ஜெராக்ஸ் எடுத்து போலியான விமான டிக்கெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட சனா, அதற்கான காரணத்தையும் கண்ணீர் மல்க விவரித்தார்.

அண்மையில் தான் சனாவுக்கும், நிவாஸிற்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மீது தீராத காதலும் அன்பும் கொண்ட சனாவால், கணவர் தன்னை பிரிந்து வெளி நாடு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வேலைக்கு செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க செல்லும் சாக்கில் உடன் சென்றுள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் கூட தன் கணவனை விட்டு பிரிந்திருக்க மனமில்லாத சனா, கணவனுடன் விமான நிலையத்திற்குள் சென்று ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக கணவர் நவாசிற்கு எடுக்கப்பட்ட இ டிக்கெட்டில் தன்னுடைய பெயரை சேர்த்து முன் கூட்டியே கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டார்.

வீட்டில் அவரை வழியனுப்ப செல்வதாக கூறி கணவருடன் சென்னை விமானநிலையம் சென்ற சனா, போலி டிக்கெட் மூலம் எளிதாக விமான நிலையத்திற்குள் தடையின்றி நுழைந்துள்ளார். பின்னர் விமானம் ஏறும் வரை தனது கணவருடன் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த சனா, தனது கணவனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்து விட்டு கணவரின் விமானம் வானில் பறக்க ஆரம்பித்ததும் அங்கிருந்து வெளியே வந்ததாக கூறியுள்ளார்.

தான் செய்தது தவறு தான் என்றாலும் கணவர் மீது கொண்ட அளவுக்கதிகமான காதல் காரணமாக இப்படி செய்ததாக கூறி கண்ணீர்விட்ட சனா தன்னை மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இது போன்ற செயல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டி சனாவை கைது செய்து,சென்னை விமானநிலைய காவல் நிலைய மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே சனா, எந்த இண்டர் நெட் செண்டரில் போலியான டிக்கெட்டை தயார் செய்து பிரிண்டு எடுத்தார், உண்மையிலேயே கணவர் மீதான பாசம் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது உள் நோக்கமா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அவரை சொந்த ஊரான ஹைதராபாத் அழைத்துச்சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கணவன் மீதுள்ள அன்புக்காக சிறைக்கு செல்லும் அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கும் பாசக்கார மனைவிகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments