கண்களுக்கு விருந்தளிக்கும்... கண்ணாடிப் படகு சவாரி!

0 3334
கண்களுக்கு விருந்தளிக்கும்... கண்ணாடிப் படகு சவாரி!

மன்னார் வளைகுடா கடலுக்கு அடியிலுள்ள அரிய வகை உயிரினங்கள், பவளப் பாறைகள் உள்ளிட்டவற்றை கண்டுகளிக்க வனத்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கண்ணாடி படகு சவாரி சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முள் தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், கடல் பசுக்கள், கடல் அட்டைகள் என ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்குள்ள பவளப் பாறைகள் கண்களையும் மனதையும் கவரும் வண்ணத்தில் உள்ளன.

இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் கீழ் இயங்கி வரும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் கண்ணாடி படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமத்தில் இருந்து அரை நாட்டிக்கல் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர நபர் ஒருவருக்கு 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

கடலுக்குக் கீழே உள்ள உயிரினங்களையும் பவழப் பாறைகளையும் கண்டுகளிக்க இந்தப் படகின் தரைப்பகுதியில் பிரத்யேக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்படும் இந்த கண்ணாடி படகு கடலுக்கு நடுவில் உள்ள ஒரு மணல் திட்டிற்கு செல்கிறது. அங்கு சென்றதும் சுற்றலா பயணிகள் படகில் இருந்து இறக்கி விடப்படுகின்றனர். மணல் திட்டில் கரை ஒதுங்கியுள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் கடல் நீரில் இறங்கி மகிழ்கின்றனர். மீண்டும் பயணிகளை படகில் ஏற்றிக் கொண்டு மணல் திட்டை வனத்துறையினர் சுற்றிக் காட்டுகின்றனர்.

தற்போது இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், வரவேற்பைப் பொருத்து, கூடுதல் படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments