3 மணி நேர மறியல் போர் சாலையில் அமர்ந்த விவசாயிகள்!

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ், மொகாலி நகரங்களில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
காஷ்மீரில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர மறியல் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சாலையில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை.
கர்நாடகத் தலைநகர் பெங்களூர் ஏலகங்காவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.
ராஜஸ்தான் மாநில விவசாயிகள் அரியானா மாநில எல்லையான சாஜகான்பூரில் நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்டினர்.
Comments