அடுத்து வரப்போகும் அரசின் அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் ஆரூடம்..!

திமுக சொல்வதையே தற்போதைய ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை அடமானக் கடன் தள்ளுபடி அறிவிப்பு அடுத்த 3 நாட்களில் வரும் என ஆரூடம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டு, மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்து, தான் முதலமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நூறு நாட்களில், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில், மனு கொடுத்ததற்கான அட்டையுடன் கோட்டைக்குள்ளும், முதலமைச்சர் அறைக்குள்ளும் நீங்கள் தைரியமாக வரலாம் என்றார். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டிட வேண்டும் என்பதே தனது பாலிசி என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, 12 ஆயிரத்திற்கும் அதிகமான நூலகங்கள் தொடங்கியதாகவும், அவை இப்போது கேட்பாரற்று கிடப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி என தாம் தேர்தல் வாக்குறுதி அளித்ததால், ஆட்சியாளர்கள் திடீரென்று கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள் என்று குறிப்பிட்டார்.
Comments