ஓட்டுநர் வேடமிடும் களவாணிகள்... கார் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு...!

0 37071
ஓட்டுநர் வேடமிடும் களவாணிகள்... கார் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு...!

சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் கார் உரிமையாளர்களிடம் நல்லவர்கள் போல் நடித்து கார்களை தினசரி வாடகைக்கு எடுத்து, அவற்றுக்கு கள்ளச்சாவி தயார் செய்து, திருடி வந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் அண்மையில் கார் ஒன்று காணாமல் போயிருக்கிறது. காரின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், வியாழக்கிழமையன்று மறைமலைநகர் அடுத்த மல்ரோசபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற நபர் முன்னுக்குப் பிண் முரணாகப் பேசியுள்ளான்.

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவன் கார் திருடன் என்பது தெரியவந்தது. அவனும் அவனது கூட்டாளிகளான அருள்முருகன் மற்றும் பிரபுராஜ் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் வைத்திருப்பவர்களை தேடிச் சென்று கார்களை தினசரி வாடகைக்கு எடுத்துள்ளனர். கார்களை எடுத்ததும் உடனடியாக அவற்றுக்கு கள்ளச்சாவியை தயார் செய்து வைத்துக் கொள்வர்.

2 மாதங்களுக்கு மட்டும் வாடகைப் பணத்தை முறையாகக் கொடுத்துவிட்டு, பின்னர் உரிமையாளர்களை அலைக்கழிப்பர். ஒரு கட்டத்தில் உரிமையாளர்கள் கார்களை மீட்டு எடுத்துச் சென்றதும், தாங்கள் வைத்திருக்கும் கள்ளச்சாவியைக் கொண்டு அதே கார்களை திருடிச் சென்றுவிடுவர். அப்படி திருடிச் செல்லும் கார்களின் பதிவு எண்களை மாற்றி, வெளிமாவட்டங்களில் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதே பாணியில் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்களிடமும் நல்லவர்கள் போல நடித்து கார் ஓட்டுநர்களாக வேலைக்குச் சேர்ந்து, சில மாதங்களில் கார்களை திருடிச் சென்று வெளிமாவட்டங்களில் பதிவு எண்களை மாற்றி வாடகைக்கு விட்டுவிடுவர் என்றும் கூறப்படுகிறது. முருகானந்தம் கொடுத்த தகவலின்படி அருள்முருகனையும் பிரபுராஜையும் கைது செய்த மறைமலைநகர் போலீசார், 75 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 கார்களை மீட்டனர். 

தினசரி வாடகை, மாத வாடகை தருகிறோம் என கார்களை கேட்டு வரும் நபர்களிடம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறும் போலீசார், சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments