தெலங்கானா: ஏசி இருக்கு ...கதவு இருக்கு... ஏ.டி.எம் இயந்திரத்தை மட்டும் காணோம்!

0 1330

தெலங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று உடைத்து அதில் இருந்த  ரூ. 30 லட்சம்  பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் நகரில் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. காவலாளி இல்லாத இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது, எங்கே சத்தம் கேட்டு விடுமோ என்கிற அச்சத்தில், இயந்திரத்தை கயிறு கட்டி காரில் இழுத்து சென்றனர். பின்னர் ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த  ரூ.30 லட்சம்  பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

ஏடிஎம் மையத்தில் ஏசி இருக்கு, கதவு இருக்கு , ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் காணோமே என அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வெளி மாநிலங்களை சேர்ந்த கைதேர்ந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைத்துள்ள தெலுங்கானா காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம் மிஷினில்  பணம் கொள்ளை போவது இது முதல் முறை இல்லை என்றாலும், ஏடிஎம் இயந்திரத்தையே அலேக்காக தூக்கி சென்று கொள்ளையடித்த சம்பவம்  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments