அணுசக்தி ராக்கெட்; தாறுமாறு ஸ்பீடு : 90 நாட்களில் செவ்வாய் கிரகம்!

0 24704
அணுசக்தி ராக்கெட்... கணிக்க முடியாத வேகம் - 90 நாட்களில் செவ்வாய் கிரகம்!

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளவும், அங்கு மனிதனைக் குடியேற செய்யவும் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்துவருகின்றன. இந்த முயற்சியை மேலும் வேகப்படுத்தும் வகையில் அணுசக்தி மூலம் இயங்கும் ராக்கெட்டை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பூமியிலிருந்து சராசரியாக 18.5 கோடி தொலைவில் அமைந்துள்ளது செவ்வாய் கிரகம். வரும், 2035 - ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் காலடியை பதிக்க நாசா திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சிவப்பு கிரகமான செவ்வாயில் மனிதன் காலடி எடுத்து வைப்பதென்பது மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழலானது பூமியுடன் ஒப்பிடுகையில் மிக மிக மோசமானதாகும். அண்டார்ட்டிகாவை விடவும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. மிக மிக குறைவான அளவே அளவிலான ஆக்சிஜன் அங்குள்ளதால், மனிதன் அங்கு உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிகவும் கடினமான செயலாகும். அதனால், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் மனிதர்கள் எவ்வளவு காலம் அங்குத் தங்கியிருக்கிறார்களோ அவ்வளவு ஆபத்தில் உள்ளனர் என்று அர்த்தம்.

மேலும், விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் போது அதிக காலம் விண்வெளியில் இருக்கும்போது விண்வெளி கதிர்வீச்சு மூலம் கதிர்வீச்சு நோய், புற்றுநோய், எலும்பு அடர்த்தி குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் ரத்த அணுக்கள் அழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும். இந்த பிரச்னையை சமாளிக்க வேண்டுமானால், விரைவாகப் பயணித்து விண்வெளியில் இருக்கும் நேரத்தைக் குறைத்தால் மட்டுமே ஆபத்து குறையும்.

பயண நேரத்தைக் குறைக்க வேண்டுமானால், விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமே ஒரே தீர்வு. இதற்கு, அமெரிக்காவின் சியாட்டிலை தளமாகக் கொண்ட அல்ட்ரா சேஃப் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் ( USNC Tech ), அணு சக்தி இயந்திரம் மூலம் இயங்கும் விண்கலத்தை ( nuclear thermal propulsion engine ) தீர்வாக முன்வைத்துள்ளது. அணுசக்தி ராக்கெட் என்ஜின்கள் குறித்த யோசனை 1940 - ம் ஆண்டுகளிலிருந்தே முன்மொழியப்பட்டு வந்தாலும், விண்வெளி பயணத்துக்குப் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பம் தற்போதுதான் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, பூமியிலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆளில்லா விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையக் குறைந்த பட்சம் ஏழு மாத காலம் ஆகிறது. மனிதர்களுடன் செவ்வாய் கிரகத்தை அடையக் குறைந்தபட்சம் ஒன்பது மாத காலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அணுசக்தி மூலம் இயங்கும் விண்கலம் மூன்று மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என்று அல்ட்ரா சேஃப் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் கூறியுள்ளது.

தற்போது இயக்கப்படும் ராக்கெட்டுகள் திரவ எரிபொருள்கள், திட எரிபொருள்கள் மூலம் இயக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்சிஜன் கலவை, ஆல்கஹால் மற்றும் திரவ ஆக்ஸிஜன் கலவை ஆகிய திரவ எரிபொருட்களும் அலுமினியம் பவுடர் உள்ளிட்ட திட எரிபொருள்களும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று திரும்ப வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.

அதனால், விண்வெளி நிறுவனங்கள் யுரேனியத்திலிருந்து வெப்பத்தை உருவாக்கும் அணு உலையை உருவாக்கியுள்ளன. இந்த வெப்ப ஆற்றல் ராக்கெட்டில் உள்ள எரிபொருளான திரவ ஹைட்ரஜனை சூடுபடுத்துகிறது. அப்போது, திரவ ஹைட்ரஜன் வாயுவாக விரிவடைந்து உந்து சக்தியை உருவாக்கி விண்கலத்தை முன்னோக்கி செலுத்தும்.

அணுசக்தியால் இயங்கும் ராக்கெட்டுகள் இன்று பயன்படுத்தப்படும் ரசாயன ராக்கெட்டுகளை விட சக்தி வாய்ந்ததாகவும், இரு மடங்கு திறன் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த அளவிலான எரிபொருள் மூலம் வேகமாகவும், நீண்ட தூரத்துக்கும் பயணிக்க முடியும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் பயணிக்க வேண்டிய செவ்வாய் கிரக பயணத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துவிட முடியும்.

ஆனால், விண்கலத்தை இயக்கும் nuclear thermal propulsion இயந்திரத்தை உருவாக்கும்போது, அணு வெப்ப இயந்திரத்துக்குள் உருவாகும் அதீத வெப்பநிலையைத் தாங்கும் வகையில் யுரேனியம் எரிபொருளைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செயல்படும் சிலிக்கன் கார்பைடு எரிபொருளை உருவாக்கியதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்த்துள்ளதாக அல்ட்ரா சேஃப் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.

அணுசக்தி விண்கலத்தைப் பயன்படுத்தும்போது, விண்வெளி கதிர்வீச்சைப் போலவே அணு உலை கதிர்வீச்சும் பாதிப்பை ஏற்படுத்தும். ராக்கெட்டின் வடிவமைப்பு மூலம் இந்த அபாயத்தை தீர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். திரவ எரிபொருள்களை அணு உலை இயந்திரத்துக்கும் குழுவினருக்கும் இடையே சேமிப்பதன் மூலம் கதிர் வீச்சைத் தடுத்து, கவசமாகச் செயல்படவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் அணு உலையில் உருவாகும் கதிர்வீச்சைத் தடுத்து விண்வெளி வீரர்கள் தங்கியுள்ள கலன்களைப் பாதுகாக்க முடியும்.

மேலும், விண்கலம் மேலெழும்போது விபத்து ஏற்பட்டால் அணு உலை மூலம் பூமிக்கு பிரச்னை எழலாம் என்ற கேள்வி எழுந்த போது, வழக்கமான ராக்கெட் மூலம் விண்கலத்தைப் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குக் கொண்டு சென்று, அதற்குப் பிறகு, அணு உலையை இயக்கி விண்கலத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால், ராக்கெட்டின் அணு உலை உடைந்தாலோ அல்லது ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டாலோ கதிரியக்கப் பொருள்கள் பூமியில் விழாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் விண்வெளியில் சுற்றுவதன் மூலம், இயற்கையாகவே ஆபத்து ஏற்படாத அளவுக்குக் கதிரியக்கப் பொருட்கள் சிதைந்து போகும்.

அணுசக்தி ராக்கெட்டுகள் மனித விண்வெளி பயணத்தை மேம்படுத்துவதோடு, விண்மீன் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும். நாசா, பாதுகாப்புத் துறை போன்ற அரசு நிறுவனங்களுக்கும் வணிக துறையில் ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இதன் மூலம், சூரிய மண்டலத்தில் உள்ள விடுவிக்கப்படாத ரகசியங்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியும் என்று அல்ட்ரா சேஃப் நியூக்ளியர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநர் மைக்கேல் ஈட்ஸ் ( Michael Eades ) தெரிவித்துள்ளார்.

அணுசக்தி விண்கலன்கள் பரவலான பயன்பாட்டுக்கு வர குறைந்தது இருபது வருடங்களாவது ஆகும் என்று கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அணுசக்தி ராக்கெட்டை அனுப்பி வைப்பதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments