பின்னங்கால்கள் கிடைத்ததும் பறந்த பப்பிஸ்கள்... முடங்கிக் கிடந்த துயரத்துக்கு விடிவு காலம்!

தாய்லாந்து நாட்டில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சக்கர வண்டிகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஜாக்கிங் ((jogging)) சென்ற காணொளி காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அபரிமிதமாக அதிகரித்துவிட்ட வாகனப் போக்குவரத்து காரணமாக ஒவ்வொரு நாளும் விலங்குகள் அடிபட்டு சாலைகளில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு உயிரினங்கள் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து வருகின்றன. இதில், அதிகம் பாதிக்கப்படுவது நாய்களே. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் நாய்கள் விபத்தில் சிக்கி கால்களை இழந்து நடக்க முடியாமல் தவித்து வருகின்றன.
தாய்லாந்து நாட்டின் சோன்பூரி (( Chonburi )) மாகாணத்தில், விபத்தில் கால்களை இழந்த நாய்கள் பராமரிக்கப்படுகின்றன .தி மேன் தட் ரெஸ்க்யூஸ் டாக்ஸ் (( The Man That Rescues Dogs )) எனும் அறக்கட்டளை 2002 - ம் ஆண்டிலிருந்து விபத்தில் அடிபட்டு மோசமாகக் காயமடைந்த நாய்களைக் கொண்டுவந்து பாதுகாப்பாக வளர்க்கிறது. கால்களை இழந்த நாய்களுக்கு, இயலாமையைப் போக்கும் வகையில், சக்கரம் பொருந்திய வண்டி ஒன்றையும் அவர்கள் தயார் செய்துள்ளனர். அந்த வண்டியில் தினமும் காலையில் ஜாக்கிங் செல்லும் நாய்கள், அருகேயுள்ள நீர்நிலையில் குளித்து மகிழ்ந்து வருகின்றன.
இந்த மறுவாழ்வு மையத்தில் ஒவ்வொரு நாளும் 600 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. மேலும், தெருக்களில் உலாவும் 350 க்கும் மேற்பட்ட நாய்களுக்கும் உணவளிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது இந்த மறுவாழ்வு மையத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக அவற்றுக்குக் கிடைத்துவந்த நன்கொடை 40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மேலும், மறுவாழ்வு மையத்துக்கு அதிகளவில் நன்கொடை அளித்த வெளிநாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து அறக்கட்டளையை சேர்ந்தவர் கூறுகையில் “நாய்களைப் பராமரிக்க வேண்டுமானாலும் நன்கொடை மிகவும் முக்கியம். தன்னார்வலர்களும் பார்வையாளர்களும் தான் எங்களைப் பற்றிய செய்திகளைப் பரப்புகிறார்கள். அடிபட்டு நடக்க முடியாமல் கிடந்த நாய்கள், சக்கர நாற்காலிகள் பொருத்தப்பட்ட பிறகு மகிழ்ச்சியுடன் ஓடுவதைப் பார்க்க முடிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Comments