மகள், பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்!- எமனேஸ்வரத்தில் சம்பவம்

0 15142

பரமக்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகேயுள்ள கேணிக்கரையைச் சேர்ந்த நாகநாதனுக்கும், பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சங்கீதாவுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். பரமக்குடி அருகேயுள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்திலுள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சங்கீதாவின் கணவர் நாகநாதன் தினசரி குடித்து விட்டு குழந்தைகள் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி கொடுமை செய்து வந்துள்ளார்.

இது குறித்து சங்கீதா தன் தந்தை கருப்பையாவிடம் கூறி அழுதுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையா பல முறை நாகநாதனை கண்டித்துள்ளார். ஆனால், குடி பழக்கத்தை கை விடாத நாகநாதன் மது போதையில் தொடந்து மனைவி , குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நாகநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நாகநாதன் மீண்டும் குடித்து விட்டு சென்று, மனைவி சங்கீதா, மகள்களிடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். 'என் மீதே போலீசில் புகார் கொடுப்பியா என்று கூறி மனைவியை தாக்க முற்பட்டுள்ளார்.

இந்த சமயத்தில் அங்கு வந்த சங்கீதாவின் தந்தை கருப்பையா, மருமகனை தடுத்துள்ளார். ஆனால், மாமனார் கூறியும் நாகநாதன் கேட்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கருப்பையா நாகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர், கருப்பையா எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாகநாதன் உடலை கைப்பற்றிய போலீஸர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
------

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments