16.43 லட்சம் விவசாயிகளுக்கு... ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி..!

ஜனவரி 31 வரை, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 5 ஆயிரத்து 318 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததை சட்டமன்ற உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
கொரோனா பெருந்தொற்று, நிவர், புரெவி போன்ற புயல்களும், கடந்த மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றார். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி என்ற கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தில், விவசாயிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Comments