திருடுவதை பார்த்து கூச்சலிட்டதால், சிறுமியைக் கத்தரியால் குத்திய திருடன் கைது!

0 17278

தென்காசி அருகே, திருடனை பார்த்து கூச்சலிட்ட சிறுமியை கத்தரிகோலால் குத்திய திருடனை போலீஸார் கைது செய்தனர்.
 
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரின் மகன் சுடலை , மனைவி சத்யா மற்றும் 8  வயது மகளுடன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை, தாத்தா, பாட்டி, தாய் , தந்தை எல்லோரும் வேலைக்கு சென்று விட  தாத்தா வீட்டிற்குச் சென்றுள்ளார் சிறுமி. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், பால்ராஜ் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து திருடியுள்ளார்.
 
முத்துக்குமாரைக் கண்டவுடன்  கூச்சல் போடச் சிறுமி முயன்றதால் ஆத்திரமடைந்த அவர் அருகிலிருந்த கத்தரிக்கோலால் சிறுமியின் கழுத்தில் குத்திவிட்டு,வீட்டுக்கும் தீ வைத்துவிட்டு, திருடிய பொருட்களுடன் தப்பியோடியுள்ளார்.
 
வீடு எரிவதைக் கண்டு,  அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் , வீட்டிற்குள் சென்றவுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  உயிருக்குப் போராடிய சிறுமியை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதைத் தொடர்ந்து, செங்கோட்டை காவல்துறையினர், தப்பிச்சென்ற முத்துக்குமாரைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.  விசாரணையில், முத்துக்குமார் அதே பகுதியில் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவருக்கு அந்த  பகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவுரை கூறிவந்ததும் தெரியவந்தது. காவல்துறையின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட முத்துக்குமார் , நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments